“இதெல்லாம் தமிழகத்தின் சாபக்கேடு”- வேதனையுடன் பதிவிட்ட அண்ணாமலை

 
 அண்ணாமலை   அண்ணாமலை

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் திரு. கவின்குமார், ஜாதியின் பெயரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தி, மிகுந்த வேதனையளிக்கிறது. திரு. கவின்குமார் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அண்ணாமலை

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் திரு. கவின்குமார், ஜாதியின் பெயரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தி, மிகுந்த வேதனையளிக்கிறது. திரு. கவின்குமார் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏறத்தாழ சம வயதுள்ள இளைஞரை, மற்றொரு இளைஞர் வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு, சமூகத்தில் ஜாதி வெறி தொடர்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பெற்றோர்களின் அதிகாரம் கொடுக்கும் துணிச்சலோ அல்லது, சமூகம் கொடுத்த முட்டாள்தனமான தைரியமோ எதுவாக இருந்தாலும், இன்னொரு உயிரை எடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. இது போன்ற கொலைகள் தொடர்வது, தமிழ்ச் சமூகத்தைப் பிற்போக்குப் பாதையில்தான் கொண்டு செல்லும் தவிர, யாருக்கும் எந்த நலனும் கிடைக்கப்போவதில்லை. நன்கு வாழ வேண்டிய இளைஞரின் வாழ்க்கை, ஜாதியின் பெயரால் பறிக்கப்பட்டிருப்பதை சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாது.

பல தலைமுறைகள் கடந்தும், ஜாதியப் படிநிலைகள் இன்னும் சமூகத்தில் புரையோடியிருப்பதைப் பார்க்கும்போது, பண்பட்ட சமூகம், உலகின் தொன்மையான குடி என்றெல்லாம் பெருமை பேசிக் கொள்ளும் தகுதி நமக்கு இல்லை என்றே தோன்றுகிறது. ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்க நாம் யாருமே இத்தனை ஆண்டு காலம் முயற்சிக்காமல் இருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு” எனக் குறிப்பிட்டுள்ளார்.