நாளை மாரியம்மனும், அய்யனாரும் வேண்டாம் என திமுகவினர் சொல்வார்கள்- அண்ணாமலை

 
அண்ணாமலை

இப்போது சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லும் திமுக, பின்னர் மாரியம்மனும், அய்யனாரும் வேண்டாம் என்று சொல்லும். நம் ஊரைக் காக்கும் தெய்வங்களை அழிப்பதுதான் திமுகவின் குறிக்கோள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Image

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றைய என் மண் என் மக்கள் பயணம், தமிழகத்திலே ஒரு அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் என்பதற்காக, பெரும் திரளெனக் கூடி ஆதரவு தெரிவித்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் மத்தியில் சிறப்பாக நடந்தேறியது. 

கடந்த 9 ஆண்டுகளில் நம் பாரத நாடு, நல்ல ஒரு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த போது, உலக அளவில், பொருளாதாரத்தில் 11வது நாடாக இருந்த நம் பாரதம், இப்பொழுது 5 வது இடத்தைப் பிடித்திருக்கிறது. பாஜக ஆட்சியில் நாடு பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கொடுத்து பாரதிய ஜனதா கட்சி பெருமை சேர்த்துள்ளது. ஆனால் தமிழகத்தில், கடந்த 30 மாதங்களாக, ஒரு குடும்பத்திற்காக மட்டுமே ஆட்சி நடக்கிறது. 

Image

தினமும் செய்திகளில், கொலை, கொள்ளை, டாஸ்மாக், கஞ்சா, தண்ணீர், ஊழல் பிரச்சனைகள் பற்றிய செய்திகளையே பார்க்கிறோம். கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கி இருக்கும் தொகை 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் தமிழக முதலமைச்சர், நிதி எதுவுமே வரவில்லை என்று பொய் கூறுகிறார்.

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்கிறார் உதயநிதி ஸ்டாலின். சனாதன தர்மம் என்பது அனைத்து மனிதனையும் சமமாக பார்ப்பதே. சனாதன தர்மம் என்பது நம் வாழ்வியல் முறை. சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்றால், அதனை பாஜக ஆதரிக்காது. இப்போது சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லும் திமுக, பின்னர் மாரியம்மனும், அய்யனாரும் வேண்டாம் என்று சொல்லும். நம் ஊரைக் காக்கும் தெய்வங்களை அழிப்பதுதான் திமுகவின் குறிக்கோள். கிறிஸ்தவ சகோதரர்கள் விழாவில் சென்று, நான் ஒரு கிறிஸ்தவன் என்கிறார். இப்போது, நான் எந்தக் கடவுளையும் நம்ப மாட்டேன் என்கிறார். யாருக்காவது உண்மையாக இருக்கிறாரா? 

Image

இன்று கூடியிருந்த இளைஞர்கள் அனைவருமே முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் சொந்த உழைப்பில் முன்னேறுபவர்கள். ஆனால் உதயநிதி ஸ்டாலின், அவரது தாத்தா மற்றும் அப்பாவின் பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அமைச்சர் பி டி ஆர் கூறியது போல, 28 மாதத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் மூலம் சம்பாதித்திருக்கிறார். திமுகவில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் களையாமல், இந்து மத தர்மத்தை அழிப்போம் என்று சொன்னால் அதனை அனுமதிக்க முடியாது.

ஊழலை, டாஸ்மாக்கை, ஏழ்மையை, வறுமையை ஒழிப்போம் என்று சொன்னால் நாங்களும் திமுகவோடு கைகோர்க்க தயார். ஆனால் அவற்றிற்கு திமுக போராடாது. திமுகவின் ஊழலை ஒழிக்கத்தான் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையே கொண்டு வந்துள்ளோம். மத்திய அரசின் அனைத்து மானியங்களும் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு வருவதற்கு முழு காரணம் திமுக போன்றவர்கள் செய்யும் ஊழலை ஒழிப்பதற்காக தான். பிரதமர் மோடி ஊழலற்ற, நல்லாட்சி தொடர வேண்டும். சந்தர்ப்பவாத திமுக காங்கிரஸ் கூட்டணி முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட வேண்டும். வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் மோடி அவர்கள் வெற்றியில் தமிழகமும் பெரும்பங்காற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.