கோயிலுக்கு பட்டா வழங்காமல் குப்பை கொட்டும் இடமாக மாற்றியுள்ள திமுக அரசு- அண்ணாமலை

 
அண்ணாமலை

இத்தனை ஆண்டுகளாக திரெளபதி அம்மன் கோவிலுக்கு முறையாக பட்டா வழங்காமல், குப்பை கொட்டும் இடமாக மாற்றிவைத்துள்ளது இந்த ஊழல் திமுக அரசு. இந்தக் கோவில் நிலத்திற்கு உடனடியாக பட்டா வழங்கவேண்டும் என்று பாஜக சார்பில் வலியுறுத்துகிறோம் என அக்கட்சி தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Image

இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்றைய காலை என் மண் என் மக்கள் பயணம், ஸ்ரீ ராமர் வழிபட்டதாகக் கூறப்படும் பெருமைக்குரிய, 700 ஆண்டுகள் பழமையான வேணுகோபால பார்த்தசாரதி கோவில் அமைந்திருக்கும் செங்கம் சட்டமன்ற தொகுதியில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, பெரும் திரளெனக் கூடி ஆதரவளித்த பொதுமக்களால் சிறப்புற்றது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பான, எட்டு தொகை பத்துபாட்டு நூலில் செங்கத்தை பற்றியும் செங்கத்தை ஆண்ட நன்னன் சேய் நன்னன் என்ற மன்னனை பற்றியும் பெருமையாக பாடப்பட்டுள்ளது. குட்டி தஞ்சை என்று அழைக்கப்படும் அளவுக்கு, செங்கம் தொகுதியில் பொதுமக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பெருந்தலைவர் காமராஜர், தொலை நோக்குப் பார்வையோடு கட்டிய சாத்தனூர் அணை மூலம் 50,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில், 57,004 பேருக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலம் வீடு, 4,81,495 வீடுகளில் குழாய் மூலம் குடிநீர், 2,80,004 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 2,03,252 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 3,58,215 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 4,07,252 விவசாயிகளுக்கு PM Kisan நிதியின் மூலமாக வருடம் 6000 ரூபாய் என இதுவரை ரூ.30,000 வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட முத்ரா கடன் உதவி 4,168 கோடி ரூபாய். இப்படி இந்த மாவட்டத்தின் மக்களுக்கு மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

Annamalai

செங்கம் வட்டம், தோக்காவாடி கிராமத்தில், போளூர் சாலையில், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலைமாவட்டங்களை சேர்ந்த 53 கிராம மக்களின் குலதெய்வமான, 1000 ஆண்டுகள் பழமையான தர்மராஜா திரௌபதி அம்மன் திருக்கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் மேற்பார்வையில் இந்த கோவில் உள்ளது. 1000 வருடங்களாக இருக்கும் தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில், நீர்நிலையில் இருப்பதாகக் கூறி, ஆக்கிரமிப்பை அகற்றப் போகிறோம் என்று திமுக அரசின் பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் எ.வ.வேலு தான் தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர். இத்தனை ஆண்டுகளாக, கோவிலுக்கு முறையாக பட்டா வழங்காமல், குப்பை கொட்டும் இடமாக மாற்றிவைத்துள்ளது இந்த ஊழல் திமுக அரசு. இந்தக் கோவில் நிலத்திற்கு உடனடியாக பட்டா வழங்கவேண்டும் என்று பாஜக சார்பில் வலியுறுத்துகிறோம். தொடர்ச்சியாக ஹிந்து மத விரோத போக்கில் ஈடுபட்டுவரும் எவ வேலுவை தமிழக பாஜக கடுமையாக கண்டிக்கிறது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த நமது குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்காமல், எ.வ.வேலு உள்ளிட்ட திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகள், லட்சம் லட்சமாகச் சம்பாதிக்க, மத்திய அரசு நமது குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கும் நவோதயா, கேந்திரிய வித்யாலயா, PM Shri உள்ளிட்ட பள்ளிகளையும் தமிழகத்தில் அனுமதிக்காமல், இருக்கிறது திமுக அரசு. இத்தனை ஆண்டுகளாக, தமிழகக் கல்வித்திட்டத்தை மேம்படுத்தாமல், நமது குழந்தைகளின் எதிர்காலத்தோடு திராவிடக் கட்சிகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. தாங்கள் ஊழல் செய்து சம்பாதிக்க, அடுத்த தலைமுறையை முன்னேற விடாமல் தடுக்கும் இந்த ஊழல் கட்சிகளைத் தமிழகம் புறக்கணிக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட கட்சிகள், மக்களுக்கு முறையான சாலை வசதிகளை கூட செய்து கொடுக்காமல் இருக்கின்றன. மக்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்திலும் ஊழல் செய்து, ஏழை மக்களை ஏழைகளாகவே வைத்திருக்கும் திராவிடக் கட்சிகள் தமிழகத்துக்கு இனியும் வேண்டாம். கடந்த பத்தாண்டு காலமாக, மத்தியில் ஊழலற்ற நல்லாட்சி வழங்கிக் கொண்டிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரிப்போம். தமிழகம் முழுவதும் பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து பாராளுமன்றம் அனுப்புவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.