கற்பனையான பயம், முட்டாள்தனமான வாதம்- மு.க.ஸ்டாலினை வறுத்தெடுக்கும் அண்ணாமலை

கற்பனையான பயங்களும், முட்டாள்தனமான வாதங்களுமே, தமிழக முதல்வரின் ஒரே செயல்பாடாக மாறிவிட்டன என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், “தமது குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளைப் போல, தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் எங்கள் குழந்தைகளுக்கும், மும்மொழிக் கல்வி கிடைப்பதைத் தடுக்கும் தனது வாதத்தை, பெயிண்ட் டப்பாவைத் தூக்கித் திரியும் சிலரைத் தவிர, ஒட்டு மொத்த தமிழகமுமே நிராகரித்துவிட்டதை அறிந்தவுடன், பாராளுமன்ற இடங்கள் குறைப்பு என்ற தனது கற்பனையின் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் தமிழக முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள்.
தனது நிலைப்பாட்டில் அவமானகரமான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது திமுக. பாராளுமன்ற இடங்கள் எல்லை நிர்ணயம் எப்போது நடக்கும், அது நடக்கும்போது எப்படி அது தென் மாநிலங்கள் உட்பட அனைவருக்கும் சாதகமாக இருக்கும் என்று, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்கள் தெளிவாகக் கூறியிருந்தும், ஏன் இந்த பயத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் திரு. மு.க.ஸ்டாலின்? கற்பனையான பயங்களும், முட்டாள்தனமான வாதங்களுமே, தமிழக முதல்வரின் ஒரே செயல்பாடாக மாறிவிட்டன” எனக் குறிப்பிட்டுள்ளார்.