இந்தியை 3-வது மொழியாக கொண்டு வரவில்லை என்பதை ஒப்புக்கொண்ட தமிழக அரசுக்கு நன்றி- அண்ணாமலை

கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல், PMSHRI திட்டத்தில் இணைந்து, தமிழக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழக அரசு உதவ வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், “மாண்புமிகு மத்திய கல்வித் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள், தமிழக மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என்று, முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு, தமிழக அரசு, வழக்கமான மழுப்பல் காரணங்களோடு, ஹிந்தி தவிர்த்து பிற மொழிகள் கற்பிக்கப் போதிய ஆசிரியர்கள் இல்லை என்று கூறியிருக்கிறது.
மத்திய அரசு ஹிந்தி மொழியை மட்டுமே மூன்றாவது மொழியாகக் கொண்டு வரவில்லை என்பதை ஒப்புக்கொண்ட தமிழக அரசுக்கு முதலில் நன்றி. ஏற்கனவே பல ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும்போது, உடனடியாக நீங்கள் வேறு இந்திய மொழிகளுக்கான ஆசிரியர்களை நியமித்து விடுவீர்கள் என்று, திமுக அரசை அறிந்த யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் அதற்கான பணிகளைத் தமிழக அரசு தொடங்கலாம்.
மாண்புமிகு மத்திய கல்வித் துறை அமைச்சர் திரு @dpradhanbjp அவர்கள், தமிழக மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என்று, முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு, தமிழக அரசு, வழக்கமான மழுப்பல் காரணங்களோடு, ஹிந்தி தவிர்த்து பிற மொழிகள் கற்பிக்கப்…
— K.Annamalai (@annamalai_k) February 21, 2025
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொண்டு, எந்தெந்த மொழிகளைக் கற்க மாணவர்கள் விரும்புகிறார்கள் என்பதை முடிவு செய்து, அதன் அடிப்படையில் அந்தந்த மொழிகளைப் பயிற்றுவிக்க ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும். மேலும், திமுக அரசு நினைத்தால் தமிழ் மொழியில் பட்டம் பெற்று, ஆசிரியர் பணி கனவுடன் இருக்கும் தமிழக இளைஞர்களுக்கு, பக்கத்து மாநிலங்களின் தமிழக எல்லை மாவட்டங்களில் ஆசிரியர் வேலைவாய்ப்பு கிடைப்பதையும் உறுதி செய்யலாம். எனவே, கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல், PMSHRI திட்டத்தில் இணைந்து, தமிழக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழக அரசு உதவ வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.