பண்டிகைகளை நம்பியிருக்கும் மக்களின் பொருளாதாரத்தை திமுக சிதைக்கிறது- அண்ணாமலை

 
அண்ணாமலை

சமூகத்தில்‌ பெரும்பான்மையாக இருக்கும்‌ இந்து மதம்‌ சார்ந்த பண்டிகைகளைத்‌ தேவையில்லாத கட்டுப்பாடுகள்‌ கொண்டு வந்து முடக்க முயற்சிப்பது, பொருளாதாரரீதியாக அனைவரையுமே பாதிக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Annamalai

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம்‌ முழுவதும்‌, விநாயகர்‌ சிலை தயாரிக்கும்‌ தொழிலாளிகள்‌ மீதும்‌, பக்தர்கள்‌ மீதும்‌ காவல்துறை மூலம்‌ திமுக அரசு அடக்குமுறைகளைக்‌ கையாண்டு கொண்டிருப்பதாக அறிகிறேன்‌. பண்டிகைக்‌ கொண்டாட்டங்கள்‌ என்பது சுழற்சிப்‌ பொருளாதாரம்‌ ஆகும்‌. மதப்‌ பாகுபாடின்றி, சமூகத்தில்‌ ஒவ்வொருவரும்‌ நேரடியாகவும்‌ மறைமுகமாகவும்‌ பண்டிகைகள்‌ மூலம்‌ பலனடைவார்கள்‌. 

பண்டிகைகள்‌ மூலம்‌ நடைபெறும்‌ வணிகம்‌, எளிய மக்கள்‌ பலருக்கும்‌ வாழ்வாதாரத்தின்‌ அடிப்படையாகும்‌. பெரும்பாலான மக்கள்‌ கொண்டாடும்‌ பண்டிகைக்‌ கொண்டாட்டங்களைத்‌ தடை செய்ய முயற்சிப்பதால்‌ பெரிதும்‌ பாதிக்கப்படுவது, அடித்தட்டு மக்களே. எல்லாம்‌ தெரிந்தவர்கள்‌ போல காட்டிக்‌ கொள்ளும்‌ திமுகவினருக்கு, இந்த அடிப்படை கூடத்‌ தெரியாமல்‌ இருப்பது ஆச்சரியமளிக்கிறது.  திமுக அல்ல, திக அதற்கு முன்பிருந்த அவர்களின்‌ தாய்க்கட்சியான நீதிக்‌ கட்சி உருவாக்கப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில்‌ விநாயகர்‌ சதுர்த்தி கொண்டாட்டங்கள்‌ நடைபெற்று வருகின்றன. 

இத்தனை ஆண்டுகளாக இல்லாத கட்டுப்பாடுகள்‌, திமுக ஆட்சிக்கு வந்த பின்னர்‌ மட்டும்‌ திடீரென ஏற்படுத்தப்படுவது, திமுகவுக்கு கட்சிக்கும்‌ ஆட்சிக்கும்‌ வித்தியாசம்‌ தெரியவில்லை என்பதைத்தான்‌ காட்டுகிறது. ஒட்டு மொத்த தமிழக மக்களின்‌ நம்பிக்கைக்கும்‌ மதிப்பு கொடுக்க வேண்டிய தமிழக அரசு, யாரோ ஒன்றிரண்டு பேரைத்‌ திருப்தி செய்ய மட்டும்‌ பயன்படுத்தப்படுகிறது. திமுக எனும்‌ கட்சியின்‌ காலாவதியான கொள்கைகளை, பொதுவாகச்‌ செயல்பட வேண்டிய தமிழக அரசின்‌ மீது திணிப்பதை ஏற்றுக்‌ கொள்ள முடியாது.  எந்த மதப்‌ பண்டிகையாக இருந்தாலும்‌, தமிழகத்தில்‌ கொண்டாட்டங்களுக்குக்‌ குறைவிருந்ததில்லை. 

Annamalai

சமூகத்தில்‌, அனைத்து மக்களும்‌, ஜாதி மதப்‌ பாகுபாடின்றி, பண்டிகைக்‌ காலங்களில்‌ பயன்பெறுகிறார்கள்‌. பொருளாதார ரீதியாக, எளிய மக்களுக்கான வாழ்வாதாரம்‌, பண்டிகைக்‌ காலங்களையே  பெரிதளவில்‌ சார்ந்திருக்கிறது. இந்த நிலையில்‌, சமூகத்தில்‌ பெரும்பான்மையாக இருக்கும்‌ இந்து மதம்‌ சார்ந்த பண்டிகைகளைத்‌ தேவையில்லாத கட்டுப்பாடுகள்‌ கொண்டு வந்து முடக்க முயற்சிப்பது, பொருளாதாரரீதியாக அனைவரையுமே பாதிக்கும்‌. அனைவரும்‌ சகோதரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கையில்‌, இந்து மதப்‌ பண்டிகைகளைக்‌ கட்டுப்படுத்தினால்‌, மற்ற மத மக்கள்‌ மகிழ்ச்சியடைவார்கள்‌ என்ற திமுகவின்‌ தீய எண்ணம்‌, எதிர்வினைகளையே ஏற்படுத்தும்‌ என்பதை மறந்துவிடக்‌ கூடாது. 

பொதுமக்கள்‌ அனைவருக்குமே திமுக செய்யும்‌ துரோகம்‌ இது. வருடம்‌ ஒரு முறை சில வாரங்கள்‌ நடைபெறும்‌ விநாயகர்‌ சிலை செய்யும்‌ தொழிலைத்‌ தடுப்பது, விநாயகர்‌ சதுர்த்தி  கொண்டாட்டங்களையே தடுக்க நினைக்கும்‌ முயற்சியாகத்தான்‌ தெரிகிறது. தமிழக அரசு மற்றும்‌ காவல்துறையின்‌ இந்த அராஜகப்‌ போக்கை சற்றும்‌ ஏற்றுக்கொள்ள முடியாது.  உடனடியாக, தமிழக அரசும்‌, காவல்துறையும்‌, எளிய தொழிலாளர்கள்‌. மீதான இது போன்ற அடக்குமுறைகளை நிறுத்திக்‌ கொள்ள வேண்டும்‌ என்று வலியுறுத்துகிறேன்‌. பண்டிகைக்‌ காலத்தில்‌, ஒட்டு மொத்த சமூகத்தின்‌ வாழ்வாதாரமும்‌, பண்டிகைக்‌ கொண்டாட்டங்களும்‌ இதனால்‌ பாதிக்கப்படுவதை காவல்துறை உணர வேண்டும்‌.  சோதனை என்ற பெயரில்‌ சிலை செய்யும்‌ தொழிலாளர்களைத்‌ துன்புறுத்துவதையும்‌, வழக்குப்‌ பதிவு செய்வோம்‌ என்று மிரட்டுவதையும்‌ காவல்துறை நிறுத்திக்‌ கொள்ள வேண்டும்‌. பொதுமக்கள்‌ பொறுமைக்கும்‌ ஒரு எல்லை உண்டு என்பதனை ஆட்சியாளர்கள்‌ உணர்ந்திருப்பது அனைவருக்குமே நல்லது” எனக் குறிப்பிட்டுள்ளார்.