இந்திய வரைப்படத்தில் மணிப்பூர் எங்கே உள்ளது என்று கூட முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது- அண்ணாமலை

வெறும் இப்தார் நிகழ்ச்சிக்கு மட்டுமே வரும் அரசியல்வாதிகள் நாங்கள் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இன்று தமிழக பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மையினர் அணி சார்பில் புனித ரமலான் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியானது எழும்பூர் ஃபைசல் மஹால் இடத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதி கட்சி தலைவர் A.C. சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், திரு ரவி பச்சமுத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் திரு.பி ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “சிறுபான்மையின மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. வெறும் இப்தார் நிகழ்ச்சிக்கு மட்டுமே வரும் அரசியல்வாதிகள் நாங்கள் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி எங்கேயும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரியாக செயல்பட்டது இல்லை. இந்தியாவில் 11ஆண்டு கால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக ஒரு செயல்கூட நடைபெறவில்லை. பிரதமர் மோடிக்கு சவுதி அரேபிய அரசு உயரிய விருதை வழங்கி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டு அரசின் உயரிய விருதும் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. பக்ரைன், எகிப்து, குவைத் அரசின் உயரிய விருதுகளும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளன. பக்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகள் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளித்துள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் மணிப்பூரில் என்ன நடைபெற்றது என்பது அனைவருக்கும் தெரியும். எங்கு என்ன நடந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணி மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழி போடுகிறார். இந்திய வரைப்படத்தில் மணிப்பூர் எங்கே உள்ளது என்று கூட முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது. எல்லா கட்சியிலும் சிறுபான்மை தலைவர்கள் இருக்கிறார்கள். திமுக சிறுபான்மையின மக்களுக்கு என்ன செய்தது? ” எனக் கேள்வி எழுப்பினார்.