“ஒரு ரேசன் அட்டை மீதான கடன் 4 லட்ச ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது”- அண்ணாமலை
ஒரு ரேசன் அட்டை மீதான கடன் 4 லட்ச ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயண நிறைவு விழாவில் உரையாற்றிய பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, “அமித்ஷாவால் இந்தியாவில் நக்சல்வாதம் கிட்டதட்ட முடிவுக்கு வந்துவிட்டது. 100 விழுக்காடு நக்சல் இல்லாத பாரதமாக அமித்ஷா மாற்றிக் காட்டவுள்ளார். நயினாரின் யாத்திரையை நடத்துவதற்கு பல இடங்களில் அனுமதி அளிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் வீதியில் ஒரு பெண் பாதுகாப்பாக நடமாட முடியாத நமக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு ரேசன் அட்டை மீதான கடன் 4 லட்ச ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. திமுக அரசு வாங்கியுள்ள கடனை நமது சந்ததியினர் தான் உழைத்து கட்ட வேண்டிய நிலை உள்ளது. சென்ற ஆண்டு பொங்கலுக்கு ஒரு ரூபாய் கூட திமுக அரசு தரவில்லை.
பெண்கள் அச்சமின்றி வீதிகளில் நடமாடக் கூடிய சூழல் தமிழகத்தில் இல்லை. எதாவது செய்து திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் ஒற்றைக் குரலாக உள்ளது. டீக்கடை முதல் ஆட்டோக்காரர் வரை அனைவரும் ஆட்சி மாற்றம் பற்றி மட்டுமே பேசுகின்றனர். எதையுமே செய்யாமல் 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதலமைச்சர் பொய் சொல்கிறார். தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்கள் ஆந்திர மாநிலத்துக்கு செல்வது ஏன்? திமுகவின் இணையதளத்தில் இருந்து மவட்ட வாரியாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நீக்கப்பட்டுள்ளன. அடுத்த 90 நாட்கள் திமுகவின் ஆட்சி அவலங்களை வீதி, வீதியாக வீடு வீடாக எடுத்து செல்லவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.


