“திமுக அரசு எனக்கே 48,000 ரூபாய் தரணும்”- அண்ணாமலை
ஆட்சிக்கு வந்தா காளை வளர்ப்பவர்களுக்கு மாதம் ரூ.1000 கொடுப்பேனு சொன்னாங்க.. கணக்கு போட்டா எனக்கே 48,000 கொடுக்கனும் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வந்துள்ள அமித் ஷா நேற்று மாலை புதுக்கோட்டையில் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதனையடுத்து திருச்சியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற பா.ஜ.க உயர்மட்ட குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாளான இன்று திருச்சி திருவானைக்காவல் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடைபெற்ற நம்ம ஊர் மோடி பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு 1008 பொங்கல் பானைகளில் பெண்கள் பொங்கல் வைத்தனர். அதனை அவர் பார்வையிட்டார். பின் மேடையில் அமைக்கப்பட்டிருந்த பொங்கல் பானையில் பொங்கல் வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர்கள் பியூஸ் கோயல், அர்ஜீன் ராம் மேக்வா, இணை அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர்கள் பொன்.ராதா கிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன், அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அண்ணாமலை, “தமிழ்நாட்டில் பட்டித்தொட்டி எங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைவிட அதிகமாக சென்றவர் அமித்ஷா. தமிழ்நாட்டில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற பாஜகவே காரணம். உலக வரலாற்றில் எந்தவொரு நாகரிகத்திலும் இல்லாத சிறப்பு தன்மை நமது பொங்கலுக்கு இருக்கிறது. மனித நாகரிகம், கலாச்சாரத்தை பார்க்கும்போது பழையது எப்போதும் கழிந்தாக வேண்டும். புதியது எப்போதும் வர வேண்டும். நான்கு நாள் பொங்கல் விழா. தமிழர் கலாசாரத்தில் மட்டும்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டை கொடுத்த பெருமைக்குரியவர் பிரதமர் மோடி. ஆட்சிக்கு வந்தா காளை வளர்ப்பவர்களுக்கு மாதம் ரூ.1000 கொடுப்பேனு சொன்னாங்க.. கணக்கு போட்டா எனக்கே 48,000 கொடுக்கனும்” என்றார்.


