“முதல்வர் நாற்காலியில் ஈபிஎஸ் அமரட்டும்! புரட்சி உருவாகட்டும்”- அண்ணாமலை
நம்ம கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி! 2026-ல் நம்ம ஆட்சி ஏழை மக்களுக்கெல்லாம் விடிவெள்ளியாக இருக்கும் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், தமாகா நிறுவனருமான ஜி.கே.மூப்பனாரின் 24-வது நினைவு தினம், சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கம் பின்புறம் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது.இதில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு முப்பானார் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் செயல்பட்டு வரும் கட்சிகளில் நேர்மையான அரசியலை ஜி கே வாசன் முன்னெடுத்து பணியாற்றி வருகிறார். மூப்பனார் குறித்து பேச தனக்கு அனுபவம் இல்லை. அகில இந்திய அளவில் மாற்று சக்தியாக செயல்பட்ட மூப்பனார் என்ற தமிழர் பிரதமர் ஆக்கவிடாமல் தடுக்கப்பட்டார். 2026 ல் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று சாமானிய மக்களும் பேச ஆரம்பித்து விட்டார்கள். 2026 இருந்து ஒரு புரட்சி உருவாகட்டும். நம்ம கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி! 2026-ல் நம்ம ஆட்சி ஏழை மக்களுக்கெல்லாம் விடிவெள்ளியாக இருக்கும். முதல்வர் நாற்காலியில் ஈபிஎஸ் அமரட்டும்” என்றார்.


