ஜெயிக்க மாட்டோம் என தெரிந்தப்பிறகு எங்கு போட்டியிட்டால் என்ன? சீமானை விமர்சித்த அண்ணாமலை

 
அண்ணாமலை

வெற்றிபெற மாட்டோம் என தெரிந்த பிறகு வாரணாசியில் போட்டியிட்டால் என்ன? ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் என்ன? போகும் இடம் தெரியாதவர் சீமான் என பாஜக மாநில அண்ணாமலை விமர்சித்துள்ளார். 

Image

கோவை பேரூர் பகுதியில் நடைபெற்று வரும் நொய்யல் பெருவிழா 4-ஆவது நாள் நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நொய்யல் படித்துறையில் நடைபெற்ற தீப ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபாடு செய்தவர். முன்னதாக காவடி ஆட்டம் ஆடி உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், கௌமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், சிறுதுளி தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த வனிதா மோகன், திரைப்பட நடிகை கஸ்தூரி, பாஜக மாநில விவசாய பிரிவு தலைவர் ஜி.கே.நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Image

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “சமையல் எரிவாயு ஒன்றுக்கு ரூபாய் 200 விலை குறைப்பு எனும் முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 33 கோடி எரிவாயு இணைப்பாளர்களுக்கு  அமலாகி உள்ளது. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏற்கனவே வருடத்திற்கு ரூபாய் 2,400 மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாதம் ஒரு எரிவாயு உருளைக்கு ரூ.200 என்கிற அடிப்படையில் ஆண்டுக்கு மேலும் 2,400 ரூபாய் கிடைக்க உள்ளது. 

ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக இயற்கை எரிவாயு மற்றும் எல்பிஜி விலை சர்வதேச அளவில் உயர்ந்த போதும், அதை பாஜக அரசு கட்டுக்குள் வைத்திருந்தது. இந்த நிலையில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட எரிவாயு உருளையின் விலை குறைப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி இதனை மனதார வரவேற்கிறது. மேலும் சமையல் எரிவாயு விலை குறைய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் இல்லத்தரசிகளுக்கு மன நிம்மதி ஏற்படுத்தும். கோவையை பொறுத்தவரை விமான நிலைய விரிவாக்கத்திற்கான நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான நிலம் கையப்படுத்தும் பணிகள் 100% முடிவடைந்து மத்திய அரசு நிதி ஒப்படைத்துள்ளது. 

Image

விமான நிலைய விரிவாக்க பணிகளை மாநில அரசு துரிதப்படுத்த வேண்டும். மேலும், அம்ருத் திட்டத்தின் கீழ் போத்தனூர் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது. விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து மேம்படுத்தப்பட்டால் தொழில் நகரமான கோவைக்கு பல்வேறு பயன்களை தரும். இந்த நிலையில் நமது வளர்ச்சி என்பது சுற்றுச்சூழலை அழித்து ஏற்படுவதாக இருக்கக் கூடாது. சுற்றுச்சூழலை பாதுகாத்து நம்முடைய வளர்ச்சியும் இருக்க வேண்டும். பாஜக சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதற்கட்ட பாதயாத்திரை பயணம் சிறப்பாக அமைந்தது. இந்த பாதயாத்திரையில் மக்களின் பிரச்சினைகளை நேரடியாக தெரிந்து கொண்டோம். அதனை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறுவதற்கான செயலாகவும் இந்த பாதயாத்திரை அமைந்தது. அடுத்த கட்ட பாதயாத்திரை செப்டம்பர் 4ஆம் தேதி துவங்கி மேற்கு மண்டலத்தில் மற்றும் தெற்கு மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற உள்ளது. வெற்றிபெற மாட்டோம் என தெரிந்த பிறகு வாரணாசியில் போட்டியிட்டால் என்ன? ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் என்ன? போகும் இடம் தெரியாதவர் சீமான்” என்றார்.