சாலையில் அமர்ந்து அண்ணாமலை தர்ணா- போக்குவரத்து பாதிப்பு

 
அண்ணாமலை

இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென கருத்து தெரிவித்த உதயநிதியை கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலையில் அமர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சனாதனம் குறித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதையடுத்து பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதால் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.


அந்தவகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலையில் அமர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையிலான பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நுங்கம்பாக்கம் சாலையில் பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன்பின் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின், தர்ணாவை முடித்துவிட்டு புறப்பட்டார்.