தொகுதி மறுவறையால் தமிழ்நாட்டில் எம்பிக்களின் எண்ணிக்கை 59 வரை உயரும்- அண்ணாமலை
தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39 லிருந்து 59 ஆக உயர வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026 தேர்தல் அறிக்கையை பாஜக முன்னாள் தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா வெளியிட்டார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, “நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் தமிழக எம்பிக்கள் பங்கேற்க வேண்டும். திமுக எம்.பி.க்கள் ஆக்கபூர்வமாக நாடாளுமன்றத்தில் பேசியதே இல்லை. தமிழ்நாட்டில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்திருந்தால் தொகுதி எண்ணிக்கை குறைந்திருக்கும். தென்மாநிலங்கள் பாதிக்காத வகையில் தான் பிரதமர் மோடி தொகுதி மறுவரையறை செய்கிறார். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்திருந்தால் 39 தொகுதி 31 ஆக குறைந்திருக்கும் எனவும் பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தது ஏற்புடையதல்ல. 816 ஆக நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே பெண்களும் 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க முடியும். ஒட்டுமொத்தமாக 543 என்பதை அதிகரிக்க உள்ளோம்.
எந்த மாநிலத்துக்கும் பிரச்சனை இல்லாத வகையில் அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீத இடங்களை அதிகரிக்க உள்ளோம். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 39 முதல் 59 வரை அதிகரிக்க கூடும். முதலைச்சர் ஏன் வீடியோ வெளியிட்டு எச்சரிக்க வேண்டும். யாரேனும் திமுக தொண்டன் முதலமைச்சர் கூறுவதை கேட்டு தீக்குளித்தால் அதை வைத்து அரசியல் செய்ய முதலமைச்சர் முயற்சிக்கிறார். அடுத்த தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும்போது புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி மீண்டும் உருவாகும் என எனக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இந்த சீரமைப்பின் மூலம் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி மீண்டும் உருவாகும். தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலிருந்து 59 ஆக அதிகரிக்கும்” என்றார்.



