செந்தில் பாலாஜியை தோற்கடிக்கப்போவது திமுகவினர்தான் - அண்ணாமலை

 
annamalai

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.பி வேலுமணி, ஈச்சனாரி விநாயகர் கோயில், சுகுணாபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பேரணியாக சென்று பேரூர் தாலுகா அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். குறிப்பாக பேரூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த எஸ் பி வேலுமணிக்கு அதிமுக பாஜக மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் இந்த பேரணியில் கலந்து கொண்டதோடு, இணைந்து சென்று,எஸ்பி வேலுமணியின்  வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, “கோவையின் வளர்ச்சி நாயகனாக, கோவையின் காவலனாக, அதிமுக  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான எஸ்பி வேலுமணி வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.  தொண்டாமுத்தூரில் அவர் செய்த நல்ல பணிகளில் பயன்பற்றவர்கள் அவர்களாகவே இன்று திரண்டு வந்திருக்கிறார்கள். எஸ் பி வேலுமணி ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வர வேண்டும். மறுபடியும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எஸ்பி வேலுமணி உயர்ந்த பொறுப்பில் வந்த பிறகு கோவையின் வளர்ச்சி அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும். வளர்ச்சி நிறைய தடைப்பட்டு இருப்பதாகவும், அதனால்தான் எஸ் பி வேலுமணியுடன் நின்று கொண்டிருப்பதாகவும், கோவையின் வளர்ச்சியை எஸ் பி வேலுமணி தான் உறுதி செய்ய முடியும். பெரிய வெற்றி தொண்டாமுத்தூரில் உறுதி, இதே போல 11 க்கு 11 தொகுதிகளிலும் உறுதியாக வெற்றி கிடைக்கும். 

கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்  எடப்பாடி பழனிச்சாமி, எஸ் பி வேலுமணி உயர்ந்த பதவியில் அமர்ந்த பிறகு மத்திய அரசிடம் இருந்து திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தியே தீருவோம், அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை, பாஜக அதிகாரப்பூர்வமாக சொல்கிறோம் எனவும் ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் தொடர்பாக பேசி உள்ளதாகவும் தெரிவித்தார். 9-ம் தேதி முதல் அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் தொடங்க உள்ளதாக கூறிய அண்ணாமலை, இந்த முறை தான் வேட்பாளராக இல்லாத காரணத்தால் சிறிது நேரம் இருக்கிறது, தமிழ்நாடு முழுவதும் எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் சென்று பிரச்சாரம் செய்வோம், தங்கள் கட்சி தற்போது என்னிடம்  பிரச்சாரம் செய்யுங்கள் எனக் கூறியுள்ளது, கட்சி நாளை வேட்பாளராக நிற்க வேண்டும் எனக் கூறினால் வேறு ஒரு தேர்தலில் வேட்பாளராக நிற்பேன் எனவும் தொண்டாமுத்தூரில் எஸ் பி வேலுமணி பிரச்சாரம் செய்வார், நான் மற்ற இடங்களில் பிரச்சாரம் செய்வேன், கோவையில் திமுக தோற்கும். அதை கோவை திமுகவினரே தோற்கடித்து காட்டுவார்கள்.கரூரில் இருந்து சுயேச்சையாக வந்து 18 பேர் கோவையில் போட்டியிடுவதை திமுகக்காரன் ஏற்றுக் கொள்ள மாட்டான் என தெரிவித்தார்.