“அமைச்சர் பொய் சொல்கிறார்... மதமோதலை ஏற்படுத்த திமுக அரசு முயற்சி”- அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
கோயில் சொத்துகளை பாதுகாக்க வேண்டிய செயல் அலுவலர் மேல்முறையீடு செய்தது ஏன்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “திருப்பரங்குன்றம் மலை முழுவதுமே இந்துக்களுக்கு சொந்தமானது. சிக்கந்தர் தர்கா இருக்கும் இடமே முஸ்லீம்களுக்கு சொந்தம். தர்காவில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் இருக்கும் தீபத்தூண்டில் தான் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்யப்பட்டது. காவல்துறை பணி செய்யாததால் சிஐஎஸ்எஃப் அனுப்பப்பட்டது. தீபத்தூணில் தீபம் ஏற்ற தர்கா சார்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில் மேல்முறையீடு செய்தது ஏன்? நீதியரசர் அவர்களுடைய தீர்ப்பை மதிக்காமல் மத மோதலை உருவாக்குவதற்கான எல்லா முயற்சியிலும் ஆளும் திமுக அரசு இறங்கியுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைச்சர் ரகுபதி சொல்வது பொய். 2014 ஆம் ஆண்டு தொடரபட்ட வழக்கு மலை உச்சியில் தீபம் ஏற்றவேண்டுமென்பது. தற்போது தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. மலை முழுவதும் இந்துக்களுக்குச் சொந்தம் என 100 ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பு வந்துள்ளது. தீபத் தூண் தொடர்பாக 2014 தீர்ப்பில் கூறவில்லை. மலை உச்சி தொடர்பாகத்தான் அப்போது தீர்ப்பு.
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளை பலியிட தடை கோரி அறநிலையத்துறை நீதிமன்றம் செல்லவில்லை. கோயில் சொத்துகளை பாதுகாக்க வேண்டிய செயல் அலுவலர் மேல்முறையீடு செய்தது ஏன்? அறநிலையத்துறை அதிகாரிகளை தூண்டிவிட்டு திமுக அரசு வழக்கு போட வைக்கிறது. கோவிலையும், தீபத்தூணையும் காக்க வேண்டிய செயல் அலுவலர் எதற்காக உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். டிசம்பர் 1 இல் தீர்ப்பு வழங்கப்பட்ட போதும் டிசம்பர் 3 வரை தீபம் ஏற்ற எந்த ஏற்பாடும் செய்யவில்லை. காவல்துறை பணி செய்யாததால் சிஐஎஸ்எஃப் அனுப்பப்பட்டது. மதமோதலை ஏற்படுத்த தமிழக அரசு தான் முயற்சிக்கிறது” என்றார்.


