விஜய் மீது வழக்கு போட்டு கைது செய்தால் வழக்கே நிற்காது- அண்ணாமலை

 
அண்ணாமலை அண்ணாமலை

கரூர் விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையில் இருப்பவர்கள் மீதே திமுக அரசு நடவடிக்கை எடுக்க வில்லை, ஆனால் தவெகவிற்கு பாஜக அடைக்கலம் கொடுக்கிறது என்று சொல்வது அபத்தமாக இருக்கிறது என பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “கரூர் விவகாரத்தில்  சமூக வலைதளங்களில் நீதிபதியை விமர்சிப்பது துரதிஷ்ட வசமானது, நீதியரசர் குறித்து  நாங்கள் எப்பொழுதும் குறை சொல்ல மாட்டோம். இந்த விஷயத்தை பொருத்தவரை பயன்படுத்தக்கூடிய வார்த்தை தன்மை போன்றவை நீதிபதியாக இருந்தாலும் ஒரு பேசு பொருளாகி இருக்கிறது. நீதியரசரையும், அவரது  குடும்பத்தினரையும் விமர்சனங்களுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். நீதி அரசரின் தாயார் திமுகவில் இருப்பதாக எழுதுகின்றனர். இதற்குள் நாங்கள் செல்லவில்லை. நீதியரசர் அவர்கள் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகள், ஒருபுறம் விசாரணை நடந்து கொண்டு இருக்கும் பொழுது  கருத்து சொல்வது சரியாக இருக்குமா என சொல்ல முடியாது. இது என்னுடைய கருத்து, பாஜகவினுடைய கருத்து கிடையாது, நீதிபதிகளின் கருத்தினை அரசியலாக தேவையில்லை என்பது என்  கருத்து.

கரூர் விவகாரத்தை பொருத்தவரை தவெக தலைவர் விஜய் முதல் குற்றவாளியாக வழக்கு பதிவு செய்தால் வழக்கு நிற்காது. ஹைதராபாத்தில் அல்லு அர்ஜுனா வழக்கில் அப்படித்தான் நடந்தது . அரசியல் ஆசைக்காக கைது செய்யலாம், ஆனால்  அடுத்தநாள் ஜாமீன் கிடைத்து வெளியில் வந்துவிடலாம். இது சின்ன பிள்ளைகள் விளையாடும் விளையாட்டுக்கு சமம். அரசு உறுதியாக இருந்தால் யார் தவறு செய்திருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் முதல் கொண்டு தமிழக வெற்றிக்கழகத்தின் அனுமதி வாங்கிய கீழ்மட்ட நிர்வாகிகள் முதல் கொண்டு விசாரிக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் மீது சில தவறுகள் இருக்கிறது. சில விஷயங்கள் அவர்கள் செய்திருக்க வேண்டும். ஆனால் விஜய்யை குற்றவாளியாக மாற்ற வேண்டும் என நினைத்தால் அது முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை. பாஜகவிற்கு தமிழக வெற்றி கழகத்தை, விஜயை  காப்பாற்ற வேண்டிய கடமை கிடையாது. நியாயத்தை நியாயமாக பேசுகின்றோம், ஆளுங்கட்சியால் நசுக்கப்படும் பொழுது கருத்து சொல்கிறோம். தமிழக வெற்றி கழகத்தை ஆளுங்கட்சி நசுக்க பார்க்கிறது, அதற்கு கருத்து சொல்கிறோம். அதற்காக அடைக்கலம் கொடுக்கின்றோம் என்பதெல்லாம் சரியானது அல்ல. தமிழக அரசு பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையிலேயே நடவடிக்கை எடுக்கவில்லை, தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கைகள் இல்லை, போராட்டம் குறித்து பேசிய ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி தமிழக வெற்றி கழகத்திற்கு அடைக்கலம் கொடுக்கின்றது என்று சொல்வதற்கு திமுகவிற்கு என்ன ரைட்ஸ் இருக்கிறது? முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பது திமுக அரசு,அந்த முதல் தகவல் அறிக்கை மீதே நடவடிக்கை எடுக்கவில்லை, ஆனால் பாஜக அடைக்கலம் கொடுக்கிறது என்று சொல்வது அபத்தமாக இருக்கிறது” என்றார்.