“காங்கிரஸ் கட்சிக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லை! திமுக கூட்டணியிலிருந்து வெளியேற தயாரா?”- அண்ணாமலை
கர்மவீரர் காமராஜரையே அசிங்கப்படுத்திய பிறகு அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டுமா? என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை, “மான நஷ்ட வழக்கு தொடர்ந்த டிஆர் பாலு இன்றும் நீதிமன்றத்திற்கு வரவில்லை. காமராஜர் என்ற அற்புதமான ஆட்சியாளரை வீழ்த்தியதற்கு திமுகவே பொறுப்பு. இந்திரா காந்தியுடன் இணைந்து காமராஜர் மேலே வரக்கூடாது என்ற நோக்கில் திமுக செயல்பட்டது. பொய்களை கூறி காமராஜரை திமுக வீழ்த்தியது.கர்மவீரர் காமராஜரையே அசிங்கப்படுத்திய பிறகு அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டுமா? என்பதை நான் மட்டுமல்ல, சாதாரண மக்களும் கேட்கிறார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சொந்த அறிவும் கிடையாது, வெட்கம் மானம் சூடு சொரணை என்று ஒன்றுமே கிடையாது. அடிமாடுகள் போல திமுகவுக்கு வேலை செய்கிறார்கள். வரலாற்றை மாற்றி, திருத்தி காமராஜர் பற்றி திருச்சி சிவா பேசியுள்ளார். திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற தயாரா? தேர்தலில் தனித்தாவது காங்கிரஸ் போட்டியிட வேண்டும். மானமுள்ள காங்கிரஸ்காரன் திமுக கூட்டணியில் இருக்கமாட்டான்.
தமிழகத்தின் வரலாறு, முன்னேற்றத்தை அழித்த மிக முக்கிய பங்கு திமுகவுக்கு இருக்கிறது. காமராஜர் இல்லாதபோது புதிய விசயத்தை சொல்லி மக்களை குழப்புவது கண்டிப்பது மட்டுமில்லாமல் மானம் இருக்கக்கூடிய காங்கிரஸ் இதை பார்த்து கொண்டிருக்கிறதா?” எனக் கேள்வி ழுப்பியுள்ளார்.


