"வாய் சவடால்... விஜய்க்கு ஒரு அரசியல் பாடம் எடுக்கிறேன்"- அண்ணாமலை

மக்கள் மன்றத்தில் பாஜக முதன்மை கட்சியாக உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “நான் விஜய்க்கு ஒரு அரசியல் பாடம் எடுக்கிறேன். விஜய்க்கு அரசியல் புரிதல் வேண்டும். 1973-ல் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டபோது இந்தியாவின் லோக் சபா சீட் 525 லிருந்து 545 ஆக உயர்த்தபட்டது. ஆனால் தமிழகத்திற்கு ஒரு சீட்டு கூட கிடைக்கவில்லை.அன்று ஆட்சியில் இருந்தது யார்? மத்தியில் காங்கிரஸ். மாநிலத்தில் திமுக. அதனால் தொகுதி மறுவரையறை குறித்து நியாயமாக விஜய், திமுக, காங்கிரசையே குற்றம் சாட்ட வேண்டும். ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு திறப்பு விழா நடத்தியதே விஜய் தான். முதல் படம் விஜய்யின் குருவி படம்தான்.
அரசியலில் ஒரு ரவுடியை அடித்தால் தான் இன்னொரு ரவுடியை மக்கள் ரவுடி என ஏற்றுக்கொள்வார்கள். அரசியலில் சக்திமிக்கவர்கள் பேசினால் மைலேஜ் கிடைக்கும். அதனால் பிரதமர் பற்றி விஜய் பேசுகிறார். தினமும் போராடுவது ஒரு அரசியல். கட்சி தொடங்கி 3 முறை வெளியே வருவது ஒரு அரசியல், அரசியல் என்பது வெறும் மைக் எடுத்து பேசிவிட்டு கை காட்டிவிட்டு செல்வது இல்லை. களத்தில் நின்று வேலை பார்ப்பதே அரசியல். வெறு வாய் சவடாலா? சினிமா டயலாக்கா? களப்பணியா? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். யாருக்கு யார் எதிரி என்பதை வாக்காளர்கள் முடிவு செய்வார். மக்கள் மன்றத்தில் பாஜக முதன்மை கட்சியாக உள்ளது. கட்சி ஆரம்பித்து விஜய் எத்தனை முறை வெளியே வந்துள்ளார்” என்றார்.