“தமிழகத்தில் 45.2 லட்சம் பேர் மும்மொழி கற்கிறார்கள்”- புள்ளிவிவரங்களுடன் அடுக்கிய அண்ணாமலை

பி.டி.ஆர். என்னை பார்த்து அறிவாளியான்னு கேட்குறாரு.. நான் திரும்ப கேட்குறேன்.. உங்கள் மகன் எந்த பள்ளியில் படிக்குறான்?.. கண்ணாடியை பார்த்து பேசிட்டு இருக்கீங்களா ? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பழனிவேல் தியாகராஜனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துகுடியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழ்நாட்டில் 1,835 சி.பி.எஸ்.இ பள்ளிகள் இருப்பதாக தமிழக அரசின் குழு கடந்த பிப்ரவரி மாதம் கூறியது. தமிழ்நாட்டில் 1,635 சி.பி.எஸ்.இ பள்ளிகள் மட்டுமே உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது குறைத்துள்ளார். தமிழ்நாட்டில் 1.09 கோடி மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில் படிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகிறார். பள்ளிக்கல்வித்துறையின் கொள்கை குறிப்பேட்டில் 53 லட்சம் மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில் படிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் 10ம் வகுப்பு வரை தனித்த பாடத்திட்டம் வைத்துள்ளன, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் மட்டுமே மாநில பாடத்திட்டம் உள்ளன.
மெட்ரிகுலேசன் பள்ளிகள் மாநில பாடத்திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டதாக உண்மையை மறைத்து வருகிறார் அன்பில் மகேஷ். தமிழக மெட்ரிக் பள்ளிகள் 8ம் வகுப்பு வரை தங்கள் மாணவர்களை மும்மொழி கற்பிக்க அனுமதிக்கின்றன. மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 30 லட்சம் பேர், சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பயிலும் 15.2 லட்சம் பேர் என 45.2 லட்சம் பேர் மும்மொழி கற்கின்றனர். தமிழக மாணவர்கள் 50 சதவீதம் பேர் மும்மொழி கற்கின்றனர், 50 சதவீதம் மாணவர்களுக்கு 3வது மொழியை தமிழக அரசு மறுப்பது ஏன்?. தி.மு.க.,வினரால் நடத்தப்படும் மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம் இல்லை. தமிழக மாநில பாடத்திட்டம் வெற்றிகரமானது என்றால் தி.மு.க தலைவர்களின் குழந்தைகள் ஏன் தனியார் பள்ளிகளுக்கு செல்கின்றனர்?
தமிழ்நாட்டில் 4,479 மெட்ரிகுலேசன் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 16 லட்சம் பேரும், மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 14 லட்சம் பேரும் மும்மொழி படிக்கிறார்கள். முதலில் தமிழ்நாட்டில் 2 லட்சம் பேர் தான் மும்மொழி படிப்பதாக அன்பில் மகேஷ் கூறினார். தற்போது தமிழ்நாட்டில் 15 லட்சம் பேர் மும்மொழி படிப்பதாக அன்பில் மகேஷ் ஒப்புக் கொள்கிறார். விரைவில் தமிழ்நாட்டில் 30 லட்சம் பேர் மும்மொழி படிப்பதாக தமிழக அரசு ஒப்புக் கொள்ளும்” என்றார்.