“அனைத்துக்கட்சி கூட்டம் தேவையற்றது... அதிமுகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை”- அண்ணாமலை

அனைத்துக் கட்சி கூட்டம் எதற்காக நடந்தது என்பது புரியவில்லை என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, “தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் 2026ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்
மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி.க்கள் எண்ணிக்கை என்பது காங்கிரசின் கொள்கை. இதை மோடி எதிர்த்துள்ளார். அனைத்துக் கட்சி கூட்டம் எதற்காக நடந்தது என்பது புரியவில்லை. எந்த முகாந்திரமும் இல்லாமல் மக்களிடம் பயத்தை ஏற்படுத்தும் விதமாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்துள்ளது. இந்தக் கூட்டம் தேவையற்றது. மு.க.ஸ்டாலினின் அறிக்கை முகம் சுளிக்க வைக்கிறது. தேமுதிக-அதிமுக இடையிலான பிரச்சனைக்குள் செல்லவிரும்பவில்லை. அதிமுகவுடன் மறைமுக பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. எங்களை பொறுத்தவரை அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கிறார். பாஜகவை பொறுத்தவரை கட்சியின் அடிப்படை வேலைகளில் கவனம் செலுத்திவருகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் யாரெல்லாம் இருப்பார்கள் என்பது நேரம் வரும்பொழுது பார்க்கலாம்.
சிறிய கட்சி, பெரிய கட்சி என்கிற வேறுபாடு இல்லாமல் திமுக உட்பட அனைத்து கட்சிகளையும் சந்திக்க உள்ளோம். திராவிடர் கழகமாக இருந்தாலும் தொகுதி மறுவரையறை குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ய நேரில் சென்று சந்திப்போம். இந்தியாவை, ஹிந்தியா என்று மாற்ற முயற்சி செய்கிறார்கள் என்று கூறுவதன் மூலன் கமல்ஹாசன் தனது மாநிலங்களவை இடத்தை உறுதி செய்துள்ளார். ” என்றார்.