“மறுசீரமைப்பால் தமிழகத்தில் ஒரு சீட் கூட குறையாது; ஸ்டாலின் பொய் சொல்கிறார்”- அமித்ஷா

 
அமித்ஷா

கோவையில் பாஜக மாவட்ட அலுவலகத்தை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். 

Image

கட்டிட திறப்புக்கு பின்பு மேடையில் தொண்டர்களிடம் உரையாற்றிய அமித்ஷா, “இந்தியாவில் இருக்கக் கூடிய மற்ற மாநிலங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டில் மட்டும் தான் சட்டம் ஒழுங்கு மிக கேவலமாக நிலையில் சீரழிந்து காணப்படுகிறது.  பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருக்கிறார், இது போன்ற பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் சுதந்திரமாக சென்று வருவதற்கான சூழல் கூட இங்கு இல்லை. அதேபோல வேங்கை வயல் பிரச்சனையில்  700 நாட்கள் கடந்த போதும் குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை. கள்ளச்சாராயம், விற்பனை அமோகமாக நடந்து கொண்டு இருக்கிறது. இங்கு தேச விரோத சிந்தனை மட்டும் தான் ஆட்சி கட்டிலில் இருக்கிறது. 1998-ல் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவத்தில் காரணமானவர்களை கூட ராஜ மரியாதையோடு அடக்கம் செய்யும் ஆட்சி தான் இங்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. 

Image

ஸ்டாலின் அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், நீங்கள் புதிது புதிதாக ஏதாவது கண்டுபிடித்துக் கொண்டு இருக்கிறீர்கள், அனைத்து கட்சிகளும் கூட்டம் போட்டு தொகுதி மறு சீரமைப்பு பற்றி பேச போகிறீர்கள் என்பதை கேள்விப்பட்டேன், இதை நீங்கள் புது பிரச்சனையாக உருவாக்கி இருக்கிறீர்கள். மோடி அவர்கள் பாராளுமன்றத்தில் மிக தெளிவாக சொல்லிவிட்டார், எந்த தென்னிந்திய மாநிலங்களுக்கும் இருக்கும் பாராளுமன்ற சீட்டுகளில் ஒன்று கூட குறையாது கூடுதலாக தான் கிடைக்கும் என்று உறுதிப்படுத்தி இருக்கிறார். மறு சீரமைப்பின் படி விகிதாச்சார அடிப்படையில் சீட்டுகள் ஒதுக்கப்படும். இதில் கூடுதலான சீட்டுகள் கிடைக்குமே தவிர, யாருக்கும் எந்த குறைவும் ஏற்படாது என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலினுக்கு ஒன்றை நான் தெரிவித்துக் கொள்கிறேன், நீங்கள் தமிழக மக்களிடம் மிகப்பெரிய பொய்யைச் சொல்லி துரோகம் இழைத்துக் கொண்டு இருக்கிறீர்கள், நான் தற்போது புள்ளி விவரங்களோடு நின்று கொண்டு இருக்கிறேன். நீங்கள் மறுசீரமைப்பால் மக்களுக்கு இழப்பு ஏற்படுகிறது என தெரிவிப்பதை மிகவும் கண்டிக்கிறேன். இதற்கு நீங்கள் எனக்கு பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறீர்கள். எதன் அடிப்படையில் இப்படி ஒரு பொய்யை நீங்கள் கூறுகிறீர்கள் என்பதற்கு நிச்சயம் பதில் கூறியே ஆக வேண்டும்” என்றார்.