வினோத திருவிழா : சாணி நீரில் ஊறவைத்த கட்டையால் அடி வாங்கும் பக்தர்கள்..!
ஆந்திரா-ஒடிசா எல்லையில் உள்ள போண்டக்கட்டி மற்றும் ஆந்திரா ஹால் ஆகிய பழங்குடியின கிராமங்களில், ஆண்டுதோறும் வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வினோதத் திருவிழா நடைபெறுகிறது. இதற்காக நான்கு நாட்களுக்கு முன்பே மரக்கட்டைகளை வெட்டி, அவற்றை மாட்டுச் சாணத்தில் ஊறவைக்கின்றனர். திருவிழா நாளன்று, அந்தச் சாணக் கட்டைகளால் வாலிபர்கள் சிரித்தபடியே ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கிக் கொள்கின்றனர். இந்த விசித்திரமான சடங்கைக் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி உற்சாகமாக வேடிக்கை பார்க்கின்றனர்.
இந்தத் திருவிழாவில் தாக்குதலுக்கு உள்ளாகி உடலில் காயம் ஏற்படும் வாலிபர்களுக்கு, அந்த ஊர் இளம்பெண்கள் உடனுக்குடன் மஞ்சள் அரைத்துப் பூசி முதலுதவி செய்கின்றனர். தாக்குதலின் போது ஆக்ரோஷமாக இருந்தாலும், போட்டி முடிந்ததும் தாக்கிய வாலிபரும் அடி வாங்கிய வாலிபரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து கை குலுக்கிக் கொள்கின்றனர். உடல் வலியையும் தாண்டி, வாலிபர்களிடையே ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வளர்ப்பதே இந்த நீண்ட காலப் பாரம்பரியத்தின் முக்கிய நோக்கம் என்று கிராம மக்கள் பெருமையுடன் தெரிவிக்கின்றனர்.


