மூத்த அண்ணன் ‘முரசொலி’க்கு பிறந்தநாள்.. - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!
முரசொலி இதழின் 84வது ஆண்டு நிறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, 1942ம் ஆண்டு தனது 18வது வயதில் முரசொலி இதழை தொடங்கினார். முன்னதாக தனது 12 வயதிலேயே ‘மாணவன் நேசன்’ என்னும் கையெழுத்து பத்திரிக்கையையும் நடத்தி வந்தார். முரசொலி தொடங்கப்பட்டது முதல் திராவிட இயக்க கருத்துக்களையும், தனதுகொள்கைகளையும் அதன் வாயிலாக மக்களுக்கு கொண்டு சென்ரார். ஆரம்பத்தில் துண்டறிக்கைகளாக வந்த முரசொலி, பின்னர் வார இதழாக வெளியானது. 1960ம் ஆண்டு முதல் நாளேடாக வெளிவந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் முரசொலி தொடங்கி 84 ஆண்டுகளான நிலையில், நாளைய வரலாற்றை எழுத உணர்வளிக்கும் முரசொலியின் பயணம் என்றென்றும் தொடரட்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது எக்ஸ் தள பதிவில், “மூத்த அண்ணனுக்குப் பிறந்தநாள்!
நெருப்பாறுகள் பல நீந்தி, கழகத்தின் மனச்சாட்சியாக - தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஒலிக்கும் முரசொலிக்கு அகவை 84!
அரசியலில் தெளிவு, வரலாற்றில் ஆழம், இன உணர்வில் தீரம், கலை - இலக்கியத்தில் செழுமை எனச் செயல்படும் தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையை வாழ்த்துகிறேன்!
இன்றைய செய்திகளைப் பதிவு செய்து, கருத்தாழமிக்க கட்டுரைகளால் சிந்தனையூட்டி நாளைய வரலாற்றை எழுத உணர்வளிக்கும் முரசொலியின் பயணம் என்றென்றும் தொடரட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.


