பிறந்தநாள் கொண்டாட்டம்- வாகனங்களை வழிமறித்து சாலையின் நடுவே கேக் வெட்டி குத்தாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே அரசு பேருந்தை வழிமறித்து சாலையின் நடுவே பூமாலை சூட கேக் வெட்டி, குத்தாட்டம் போட்டு பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த யானைக்கால் தொட்டி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்கின்ற இளைஞரின் பிறந்த நாளை, நேற்று மாலை வேப்பனஹள்ளி அடுத்த நாச்சிகுப்பம் கூட்ரோடு பகுதியில் அந்த வழியாக வந்த அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி மேல தாளங்கள் முழங்க , பட்டாசு சத்தத்துடன், சந்தோஷிற்கு பிரம்மாண்ட மாலை அணிவித்து சாலையின் நடுவில் டேபிள் போட்டு அதன் மீது கேக் வைத்து வெட்டி அவரின் நண்பர்கள் கொண்டாடி இருக்கிறார்கள். நீண்ட நேரமாக வாகனங்களுக்கு வழிவிடாமல் தங்களது கொண்டாட்டத்திலேயே குறிக்கோளாக இருந்துள்ளனர். இதனை அடுத்து அங்கிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அவர்களிடம் ஓரமாக சென்று கொண்டாடும்படியும், வாகனங்களுக்கு வழி விடுமாறும் கூறி உள்ளனர்.
இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பலில் இருந்தவர்கள் சிலர் தாக்கியதில் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர ராவ், அபிமன்யு ஆகிய இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஈஸ்வர ராவ் வேப்பனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வருதற்குள் அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீசாரே அகற்றினர். பிறந்தநாள் கொண்டாடிய சந்தோஷ் மற்றும் அந்த கும்பல் அந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் மீது ஏற்கனவே வேப்பனஹள்ளி உள்ளிட்ட காவல் நிலையங்களில் சூதாட்டம் சம்பந்தமான வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது சம்பந்தமான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பட்டப்பகலில் பொதுமக்களுக்கு இடையூறுக்காக அரசு பேருந்தை நிறுத்தி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


