சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள்!
சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்கள் மற்றும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் என 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக குறிப்பிட்டு ஆளுநர் கடந்த 13ஆம் தேதி அதை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதாவது, சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா , தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா , தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா , தமிழ் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா , அண்ணா பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா , தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.