இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 100% வரி விதிக்கும் மசோதா; அமெரிக்கா நிறைவேற்றம்..!!
ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்க வழிவகுக்கும் புதிய மசோதா அமெரிக்க செனட் சபையில் 86-11 என்ற கணக்கில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா முழுமையாகச் சட்டமாக மாற அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் ஒப்புதலும் அதிபரின் கையெழுத்தும் தேவைப்படுகிறது.
இது வரும் ஆகஸ்ட் 31ம் தேதி பிரதிநிதிகள் சபை மீண்டும் கூடும்போது ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.
ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் முதல் ஐந்து நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 100% வரி விதிக்க, இந்த மசோதா அதிபர் டிரம்பிற்கு அதிகாரம் அளிக்கிறது.உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்யும் வகையில் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளைத் தண்டிக்கும் நோக்கில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
'லின்சி ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் மீது தடைகள் சட்டம் 2026' (Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026) என இந்த மசோதா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த மசோதாவை அமெரிக்கா நிறைவேற்றி இருப்பது இந்தியா, சீனா, அஜர்பைஜான், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறைந்த விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்குவதா அல்லது அமெரிக்கச் சந்தையில் வர்த்தகம் செய்வதா என்பதை இந்த நாடுகள் தேர்ந்தெடுக்க வேண்டும் என அமெரிக்க எம்பிக்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த மசோதா, அதிபர் புடின் உள்ளிட்ட ரஷ்யத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், பெரும் செல்வந்தர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது தடைகளை விதிக்கவும் வழி வகுக்கிறது. ரஷ்யா மீதான நடவடிக்கைகளுடன் சேர்த்து, இந்த மசோதா 1996ம் ஆண்டின் ஈரான் மீதான தடைகள் சட்டத்தை 2031 வரை நீட்டிக்கும்.
இந்தச் சட்டம் ஈரானின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்குத் தண்டனை வழங்கவும் அதிகாரம் அளிக்கிறது.

