புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய வீடியோக்கள் போலி- பீகார் அதிகாரிகள் குழு

 
பீகார்

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் அடித்துக் கொல்லப்படுவதாக இணையத்தில் வதந்தி கிளம்பின. இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பீகார் மாநில அரசுடன் இணைந்து உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது. 

பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இந்த நிலையில் பீகார் அதிகாரிகள் தமிழகத்தில் திருப்பூர் மற்றும் கோவையில் ஆய்வு நடத்தினர். ஊதியம், தங்குமிடம், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழில்துறை பிரதிநிதிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 

அதேபோல் பீகார் மாநில ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் பாலமுருகன், காவல்துறை அதிகாரி கண்ணன், தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலோப் குமார், எஸ் டி எப் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில ஊரக வளர்ச்சித் துறை செயலர் பாலமுருகன், “இன்று காலை முதல் கோவையில் மாவட்ட நிர்வாகம், காவல்துறையுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டோம். புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான சில வீடியோ பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. அதில் அவை போலியாக உருவாக்கப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது. இந்த வீடியோக்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்போது அந்த அச்சம் தணிந்துவருகிறது. 3,4 இடங்களில் பீகாரில் இருந்து பணிபுரியும் தொழிலாளர்களிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அவர்களின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தோம்” என்றார்.