#BIG NEWS: தவெக ஆட்சியை கலைப்பது குறித்து பரிசீலிக்க ஆளுநரிடம் வீ தி லீடர்ஸ் அமைப்பு மனு..!!

 
Q

‘வீ த லீடர்ஸ்’(We the Leaders) அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் அபிலாஷ் கோபிநாதன் தமிழக கவர்னருக்கு அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;-

“மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தீபத்தூணில் 24.11.2026 அன்று கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு W.P. (C) எண் 1280/2025 மற்றும் அது தொடர்பான வழக்குகளில் 20.11.2026 அன்று பிறப்பித்த உத்தரவை, தமிழக அரசு பின்பற்றவில்லை.

திருவிழாவை நடத்த வேண்டிய முறையை சுப்ரீம் கோர்ட்டு குறிப்பிட்டு உத்தரவிட்டிருந்த போதிலும், தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய வெளிப்படையான இணக்கமின்மை, மாநில அரசின் அரசியலமைப்புப் பொறுப்புடைமை குறித்துக் கடுமையான கவலைகளை எழுப்புகிறது.

இந்திய அரசியலமைப்பின் 144-வது சட்டப்பிரிவு, இந்தியாவின் எல்லைக்குள் உள்ள அனைத்து சிவில் மற்றும் நீதித்துறை அதிகார அமைப்புகளும் சுப்ரீம் கோர்ட்டுக்கு உதவியாக செயல்பட வேண்டும் என்று வெளிப்படையாக கட்டளையிடுகிறது. ஒரு மாநில அரசு, கட்டுப்படுத்தும் தன்மையுள்ள ஒரு நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறுவது, சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்பு சார்ந்த ஆட்சிமுறையின் அடித்தளத்தையே தகர்க்கிறது.

இவற்றை கருத்தில் கொண்டு, தாங்கள் கீழ்க்கண்ட நடைமுறைகளை பரிசீலனை செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்:-

1. அரசியலமைப்பின் 167-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறியதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து முதல்-அமைச்சரிடம் இருந்து விரிவான விளக்கத்தைக் கோர வேண்டும்.

2. மாநில அரசின் நடவடிக்கைகள் அல்லது செய்யத் தவறிய செயல்கள், 144-வது பிரிவின் கீழ் உள்ள அதன் அரசியலமைப்பு கடமைகளை மீறுவதாக அமைகின்றனவா? என்பதை ஆராய வேண்டும்.

3. 355 மற்றும் 356-வது பிரிவுகளின் கீழ் உரிய அரசியலமைப்புத் தலையீட்டிற்காக, இந்திய ஜனாதிபதிக்கு ஒரு சிறப்பு அறிக்கையை சமர்ப்பிக்க சூழ்நிலைகள் போதுமானவையா? என்பதை பரிசீலிக்க வேண்டும்.

4. அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், பேணவும், தற்காக்கவும் தாங்கள் பொருத்தமானதாகக் கருதும் பிற அரசியலமைப்பு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளை செயல்படுத்த வேண்டிய மாநில அரசின் கடமையானது, ஒரு அரசியலமைப்பு ஆணையாகும்; அது நிர்வாகத்தின் விருப்புரிமைக்கு உட்பட்ட விஷயம் அல்ல. இந்த கடமையில் இருந்து எந்தவொரு விலகலும், ஜனநாயக ஆட்சியின் நேர்மையையும், அரசியலமைப்பு நிறுவனங்களின் அதிகாரத்தையும் பாதுகாக்கும் நலன் கருதி, தீவிரமான அரசியலமைப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

எனவே, தாங்கள் இந்த விஷயத்தை தீவிரமாக கவனத்தில் கொண்டு, அரசியலமைப்பின் மேலாதிக்கத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநிறுத்தும் நலன் கருதி, உரிய அரசியலமைப்பு நடவடிக்கையை தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.