#BIG NEWS : இன்று விஜய் பதவியேற்பு விழா நடைபெறாது.. விஜய்க்கு பெருபான்மை இன்னும் கிடைக்கவில்லை..!

 
1

விஜய் தலைமையிலான தவெக கட்சி  பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது.

இது தொடர்பாக அந்தந்த கட்சிகள் சார்பில் தங்களது நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. தற்போது வரை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் த.வெ.க. ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன. மேலும் வி.சி.க. ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். அதோடு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) கட்சியும் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்ததாக தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து விஜய் நேற்று மாலை கவர்னரை சென்று சந்தித்தார். அப்போது தனக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளின் கடிதங்களை கவர்னரிடம் வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையடுத்து நாளை(அதாவது இன்று) தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

திடீரென விஜய்க்கு ஆதரவு இல்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது.மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இதுவரை த.வெ.க. ஆதரவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 

த.வெ.க. தலைவர் விஜய் கவர்னரை சந்தித்தபோது, வி.சி.க. மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகளின் ஆதரவு கடிதங்களை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.அவ்வாறு இருக்கும்பட்சத்தில், கவர்னர் ஏற்கனவே கேட்டபடி ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 என்ற பெரும்பான்மை இடங்கள் த.வெ.க.வுக்கு இல்லை என்றே தெரிகிறது. இதனால் த.வெ.க. ஆட்சி அமைப்பதில் சிக்கல் தொடர்ந்து நீடித்து வருகிறது. 

இந்நிலையில் இன்று காலை தனது முடிவை அறிவிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

இந்த சூழலில், த.வெ.க.வின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு எவ்வாறு அமையப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.