#BIG NEWS : தனி மனிதத் துதி பாடல்களை தவிர்க்க வேண்டும் - திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிவிப்பு..!!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் ஆன்மிக மற்றும் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளில் தனி மனிதத் துதிப் பாடல்கள் மற்றும் அரசியல் கோஷங்களைத் தவிர்த்து, இறைபக்தி சார்ந்த பாடல்களை மட்டுமே பாட வேண்டும் எனக் கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கோவில் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் அனைத்து ஆன்மிக மற்றும் இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் கலைஞர்கள், இறைபக்தி சார்ந்த பாடல்கள் மற்றும் வசனங்களை மட்டுமே இடம்பெறச் செய்ய வேண்டும்.
ஆன்மிகத்திற்குத் தொடர்பில்லாத முழக்கங்கள், அரசியல் சார்ந்த கோஷங்கள் மற்றும் தனிநபர் புகழ் பாடும் பாடல்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
சூரசம்ஹார சர்ச்சை. நடப்பாண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவின்போது நடைபெற்ற பக்தி இன்னிசை நிகழ்ச்சியில், பாடகர்கள் சிலர் 'அரோகரா' கோஷத்துடன் முதலமைச்சர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரைப் புகழ்ந்து பாடியது பக்தர்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தால் திருக்கோவிலின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ள கோவில் நிர்வாகம், சம்பந்தப்பட்ட பாடகர்களிடம் விளக்கம் பெற்றதோடு, வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க இந்தப் புதிய விதிமுறையை வெளியிட்டுள்ளது.

