#BIG NEWS: இந்த மருந்திற்கு தமிழ்நாடு முழுவதும் தடை..!!
பாராகுவாட் டைகுளோரைடு களைக்கொல்லி மருந்திற்கு தமிழ்நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவித்துள்ளது.
வேளாண்மை - உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பாராகுவாட் டைகுளோரைடு களைக்கொல்லி அனைத்து பசுமையான களைகள் மற்றும் பயிர்களை தொடு நஞ்சாக செயல்பட்டு அழிக்கக்கூடியது. இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் 1.5 மில்லியன் மெ.டன் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதற்கு விஷமுறிவு மருந்து இல்லாத காரணத்தினால், வருடத்திற்கு சராசரியாக 17,000 பேர் இம்மருந்து உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்தியா முழுவதும் தடை
எனவே, மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம் பாராகுவாட் டைகுளோரைடு (Paraquat Dichloride) களைக்கொல்லி மருந்தினை இந்தியா முழுவதும் தடைசெய்துள்ளது.
இதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 25.11.2026 அன்று வெளியிட்ட அரசிதழ் எண்.501-ன் மூலம் மத்திய அரசால் மேற்குறிப்பிட்ட களைக்கொல்லிக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை அமல்படுத்திட அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாராகுவாட் டைகுளோரைடு களைக்கொல்லி மருந்தின் உற்பத்தி, இறக்குமதி, போக்குவரத்து, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றிற்கு மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசின் அறிவுறுத்தலின்படி,
1. பாராகுவாட் டைகுளோரைடு மருந்தினை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், கொண்டு செல்லுதல், விநியோகம் செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
2. பாராகுவாட் டைகுளோரைடு மருந்திற்கு புதிதாக எந்தவொரு பதிவும் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும், பூச்சிக்கொல்லி மருந்துகள் சட்டம் 1968-ன் பிரிவு 9-ன் கீழ் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள அனைத்து பதிவு சான்றிதழ்களும் ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும்.
3. பாராகுவாட் டைகுளோரைடு மருந்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அனைத்து பதிவு சான்றிதழ்களையும் உற்பத்தியாளர்கள் உடனடியாக மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் மற்றும் பதிவு குழுவிடம் (CIB&RC) திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
மருந்து பறிமுதல்
இதனைத் தொடர்ந்து, வேளாண்மைத் துறையின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வேளாண்மை உதவி இயக்குநர்கள் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) தலைமையிலான சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தி நிலையங்கள், விநியோக நிறுவனங்கள் மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் தீவிர ஆய்வுகள் (Inter District Squad) மேற்கொள்ளப்பட்டு, இருப்பில் வைத்திருந்த மொத்தம் 35,415 லிட்டர் பாராகுவாட் டைகுளோரைடு களைக்கொல்லி மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட இம்மருந்தின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவை மாவட்ட அளவில் வேளாண்மை உதவி இயக்குநர்கள் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு), வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் ஆகியோரின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தடையை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்துகள் சட்டம் 1968 மற்றும் விதிகள் 1971-ன்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, விவசாயிகள், பூச்சிக்கொல்லி உற்பத்தியாளர்கள், விநியோகிப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அரசின் தடை உத்தரவினை முழுமையாகக் கடைப்பிடித்து, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வண்ணம் இம்மருந்தின் பயன்பாட்டைத் தவிர்த்து முழு ஒத்துழைப்பு வழங்குமாறு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

