#BIG NEWS : இனி 'பூத் ஸ்லிப்பில்' போட்டோ இருக்காது! தேர்தல் ஆணையம் அதிரடி..! ஏன் தெரியுமா ?
வாக்காளர்களுக்கு பணம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கி முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலின் போதும் பல்வேறு கிடுக்குப்பிடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஆனாலும் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் உள்ளிட்ட பரிசு பொருட்களை கொண்டு சேர்ப்பதில் அரசியல் கட்சிகள் புதிய புதிய யுக்திகளை கடைபிடிக்கின்றன. பூத் ஸ்லிப்பை வைத்தும் முறைகேடு செய்துவந்தன.
எப்படி என்றால், முன்பு வாக்காளர்களுக்கு 'பூத் ஸ்லிப்' எனப்படும் வாக்குச்சாவடி விவரச்சீட்டுகளை அரசியல் கட்சிகள் தான் வாக்காளர்களுக்கு வழங்கி வந்தன அந்த சீட்டில் கட்சியின் சின்னமும் இடம் பெற்றிருக்கும். கூடவே விவரச்சீட்டுகள் வழங்கும் போது வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் வழங்கி வந்தன. இந்த முறைகேடுகளை தவிர்க்க விவரச்சீட்டுகளை தேர்தல் ஆணையமே அரசு ஊழியர்கள் மூலமாக வழங்கி வந்தன.. அதில் வாக்காளரின் புகைப்படமும் இடம் பெற்று வந்தது. தேர்தலுக்கு முதல் 2 நாட்களில் பூத் ஸ்லீப்கள் வழங்கப்படும். கடந்த 15 ஆண்டுகளாக நடந்த தேர்தலில் இதுவே நடைமுறையாக உள்ளது.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், ' வாக்காளர்களுக்கு வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சாவடி விவரச்சீட்டுகளுக்கு பதிலாக 'வாக்காளர் தகவல் சீட்டு' வழங்கப்படும். அதில் வாக்குச்சாவடி மையம், தேர்தல் நடைபெறும் நேரம், நாள் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். ஆனால் வாக்காளரின் புகைப்படம் இடம் பெறாது.வாக்குப் பதிவு நாளுக்கு ஐந்து (5) நாட்களுக்கு முன்னர் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு (பூத் ஸ்லிப்) விநியோகிக்கப்படும். இந்த விவரச்சீட்டை ஆவணமாக பயன்படுத்தி வாக்களிக்க முடியாது' என்று தெரிவித்துள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால் ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், அரசு ஊழியர்களுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை உட்பட 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம்.

