#BIG NEWS : மக்களுக்கு அடுத்த இடி..! விரைவில் அதிரடியாக உயரபோகும் பெட்ரோல் டீசல் விலை..!
ரஷ்யா - உக்ரைன் போர், அமெரிக்கா - இஸ்ரேல் போர் போன்ற காரணங்களால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை கடுமையான ஏற்ற இறக்கங்களை கண்டது. ஒரு கட்டத்தில் கச்சா எண்ணெய் விலை, பீப்பாய் 120 டாலர் வரை உயர்ந்தது. தற்போது கூட அதன் தாக்கம் தொடர்கிறது. இது குறித்து, 'மெக்வாரி' எனும் சர்வதேச நிதி சேவை நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது: தற்போதைய சூழலில், எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் வருவாய் நிலைமை உறுதியற்றதாக உள்ளது. இந்தியாவின் எண்ணெய் சந்தை, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
இதன் விளைவாக, பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு 18 ரூபாயும், டீசல் விற்பனையில் லிட்டருக்கு 35 ரூபாய் வரையும் இழப்பு ஏற்படுகிறது. கடந்த மாதம் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 100 டாலர்களை கடந்த போது, எண்ணெய் நிறுவனங்கள் தினசரி 2,400 கோடி ரூபாய் வரை நஷ்டத்தை சந்தித்தன. மத்திய அரசு கலால் வரியை லிட்டருக்கு, 10 ரூபாய் குறைத்ததால், எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு ஓரளவுக்கு ஈடு செய்யப்படுகிறது. ஜனவரி - பிப்ரவரி மாதம் ஈட்டிய லாபங்கள் முழுதும் மார்ச் மாதத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய செலவிடப்பட்டன. இதன் காரணமாக, ஜனவரி - மார்ச் காலாண்டில் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தையே பதிவு செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மே முதல் வாரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 வரை உயர வாய்ப்புள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப்பிரிவு தலைவர் ஆனந்த் சீனிவாசன் எச்சரித்துள்ளார். மத்திய அரசுக்கு நாளொன்றுக்கு ரூ.2500-3,000 கோடி வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், தேர்தல் முடிந்தவுடன் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படலாம் என்று தெரிவித்தார்.
தற்போது ஷெல் பங்க்குகளில் பெட்ரோல் ரூ.127-க்கு விற்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், விரைவில் மற்ற நிறுவனங்களும் இதே விலையை பின்பற்றும் என தெரிவித்துள்ளார்.



