#BIG NEWS : திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 
Q

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தீர்ப்பில், கார்த்திகை மாதம் முடிவதற்குள்ளாகவே திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றியாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தும், அங்கு தீபம் ஏற்றப்படாத விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று மத்திய தொல்லியல் துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாதது சாதாரண நிர்வாகத் தவறாகக் கருதப்படக் கூடாது என்றும், நீதிமன்றத்தின் உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார். மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்றும் நடவடிக்கையை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘கார்த்திகை மாதம் டிசம்பர் 15ஆம் தேதி வரை இருப்பதால், அந்தக் காலத்திற்குள் எந்த நாளிலும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்’’ என வாதிட்டார். ‘‘உச்சநீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட ஆட்சியர் தீபம் ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்’’ என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், மாவட்ட நிர்வாகம் தீபம் ஏற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்ததாகவும், கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றுவதற்கான குழுவுக்கு அனுமதி வழங்காததே நிகழ்வு நடைபெறாததற்குக் காரணம் என்றும் விளக்கம் அளித்தார். தீபத்தூண் பகுதிக்குச் செல்ல தொல்லியல் துறை அதிகாரிகள் தடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதையும் மாவட்ட ஆட்சியர் தரப்பு மறுத்தது. அதிகாரிகள் அங்கு சென்றதற்கான புகைப்பட ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், “நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் முழுமையாக உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறியுள்ளனர். தமிழ்நாட்டில் தற்போதைய சூழலைக் கண்டு நாங்கள் சொல்ல விரும்பும் வார்த்தை ‘ஐயோ’ என்பதே. நீதிமன்றத்தின் உத்தரவை யாரும் நீர்த்துப் போக செய்ய முடியாது” எனத் தெரிவித்த நீதிபதிகள், “இந்த கார்த்திகை மாதத்திற்குள்ளாகவே தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்” என உத்தரவிட்டனர்.