#BIG NEWS : வங்கதேசத்தில் தொடரும் கொடூரம்: ஆசிரியர் வீட்டை தீக்கிரையாக்கிய கும்பல்..!
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றது முதல், சிறுபான்மையினரான இந்துக்கள் மீது திட்டமிட்ட வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி வரை 45 மாவட்டங்களில் சுமார் 116 கொலைகள் நடந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 51 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், சமீபத்திய தாக்குதல்களில் 8 இந்துக்கள் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை, கொள்ளை, கோவில் சூறையாடல் மற்றும் பாலியல் வன்கொடுமை முயற்சிகள் என இந்துக்களின் வாழ்வாதாரம் அங்கு கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த வன்முறைச் சங்கிலியின் தொடர்ச்சியாக, தற்போது இந்து சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் பிரேந்திர குமார் டே என்பவரின் வீடு குறிவைக்கப்பட்டு, மர்ம கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலி மதக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்து குடும்பங்களைச் சித்ரவதை செய்வதும், அவர்களது வணிக நிறுவனங்களை அழிப்பதும் தொடர்கதையாகி வரும் நிலையில், இந்த அடுத்தடுத்த தாக்குதல்கள் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.


