#BIG NEWS : இந்திய வீராங்கனை பூனம் ரவுத் ஓய்வு அறிவிப்பு: 12 ஆண்டுகால வரலாற்று பயணத்திற்கு முற்றுப்புள்ளி..!

 
1

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க வீராங்கனை பூனம் ராவத், வியாழக்கிழமை (அக்டோபர் 15) அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான அவர், 12 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காகப் பல்வேறு சாதனைகளைப் படைத்து, 2021-ல் தனது கடைசி போட்டியில் விளையாடினார்.

இந்திய அணிக்காக 73 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பூனம் ராவத் 2,299 ரன்களையும், 35 டி20 போட்டிகளில் 719 ரன்களையும், 4 டெஸ்ட் போட்டிகளில் 264 ரன்களையும் குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 4 சதங்களை விளாசியுள்ள அவர் (ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள், 2014 தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 1 சதம்), ஒருநாள் போட்டிகளில் 15 அரைசதங்களையும், டி20 போட்டிகளில் 4 அரைசதங்களையும் பதிவு செய்துள்ளார். கடந்த 2021 ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியே அவர் இந்திய சீருடையில் விளையாடிய கடைசி சர்வதேச போட்டியாகும்.

கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியதில் பூனம் ராவத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது. அந்தத் தொடரில் 381 ரன்கள் குவித்த அவர், லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 86 ரன்கள் விளாசிப் போராடினார். இதே தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 109 ரன்கள் குவித்து, தீப்தி சர்மாவுடன் இணைந்து தொடக்க விக்கெட்டுக்கு வரலாற்றுச் சாதனை உலக சாதனையாக 320 ரன்கள் கூட்டணி அமைத்து அசத்தினார்.

2021-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க பிங்க்-பால் (Pink-ball Test) டெஸ்ட் போட்டியில் 36 ரன்கள் எடுத்திருந்த போது, நடுவர் 'நாட் அவுட்' கொடுத்த போதிலும், பந்து பேட்டில் பட்டதை நேர்மையுடன் ஒப்புக்கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறி உலகளவில் பெரும் பாராட்டைப் பெற்றார்.

தனது ஓய்வு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள பூனம் ராவத், "மும்பை தெருக்களில் விளையாடத் தொடங்கி இந்திய அணியின் சீருடையை அணிந்தது வரையிலான இந்தப் பயணம் ஒரு வரம். தியாகங்கள், போராட்டங்கள், மறக்க முடியாத வெற்றிகள் மற்றும் வாழ்நாள் முழுவதும் போற்றத்தக்க நினைவுகள் நிறைந்த பயணம் இது. இந்தியாவுக்காக விளையாடியது வெறும் கனவு மட்டுமல்ல, பெருமையுடன் நான் சுமந்த ஒரு பெரும் பாக்கியம். எனது இந்த அழகான பயணத்தில் என்னோடு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கிரிக்கெட் எனக்கு ஒரு தொழிலை மட்டும் தரவில்லை, முகவரியையும், ஒரு குடும்பத்தையும் தந்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.