#BIG NEWS : வாகன ஓட்டிகள் ஷாக்..! பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது Nayara Energy நிறுவனம்!

 
1

நாடு முழுவதும் உள்ள தனது பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் விலையை நயாரா எனர்ஜி (Nayara Energy) நிறுவனம் அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 வரையிலும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தியன் ஆயில் (IOCL), பாரத் பெட்ரோலியம் (BPCL), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) உள்ளிட்ட அரசு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தங்களது விற்பனை நிலையங்களில் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் பழைய விலையிலேயே விநியோகித்து வருகின்றன.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனமான 'நயாரா எனர்ஜி' (Nayara Energy), தனது பங்குகளில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5-ம், டீசல் விலையை லிட்டருக்கு ₹3-ம் உடனடியாக உயர்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை உயர்வு, இந்தியா முழுவதும் உள்ள நயாரா நிறுவனத்தின் 7,108 பெட்ரோல் பங்குகளில் சனிக்கிழமை (அக்டோபர் 3) அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

முன்னதாக, ஈரான் மோதலால் உலகளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டபோது, கடந்த மார்ச் 26 அன்று நயாரா நிறுவனம் இதே அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியிருந்தது. பின்னர், மத்திய கிழக்கில் பதற்றம் தணிந்து சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்ததைத் தொடர்ந்து, ஜூலை 1 அன்று அந்த விலை உயர்வை நிறுவனம் திரும்பப் பெற்றது. இந்நிலையில், சந்தை கொள்முதல் செலவிற்கும் சில்லறை விற்பனை விலைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் தனியார் நிறுவனம் மீண்டும் இந்த விலையேற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.