#BIG NEWS : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு: தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக், கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி மாநிலத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அந்தப் பட்டியலின்படி, தமிழகம் முழுவதும் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றத் தயாராக உள்ளனர்.
முன்னதாக, 2025 நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சுருக்கமுறைத் திருத்தப் பணிகளின் (SSR) போது, உயிரிழந்தவர்கள் மற்றும் முகவரி மாறியவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதேபோல், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்த புதிய வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டன. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வசிப்பவர்கள் உள்ளிட்ட காரணங்களால் விடுபட்டவர்களுக்கும் பெயர் சேர்க்க வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், இது குறித்து முக்கிய விளக்கம் அளித்துள்ள தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தகுதியுள்ள நபர்கள் எப்போதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
"இறுதி வாக்காளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தாலும், விடுபட்டவர்கள் தங்களது பெயர்களைச் சேர்க்க இன்னும் கால அவகாசம் உள்ளது. வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்பு வரை, தகுதியுள்ள பொது மக்கள் ஆன்லைன் வாயிலாகப் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்."
இந்த அறிவிப்பு, இறுதிப் பட்டியலில் பெயர் விடுபட்ட வாக்காளர்களுக்குப் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
விடுபட்ட பெயரை சேர்ப்பது எப்படி
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரவீன்குமாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "பெயர் விடுபட்டுப் போன வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள படிவம் 6-இல் உள்ள தகவல்களை முழுவதுமாக நிரப்பி வேட்புமனு தாக்கல் நடைபெறுவதற்கு முன்பு பதிவு செய்யலாம்.
ஆனால், தாங்கள் குடியிருக்கும் வீட்டு முகவரிக்கான சான்றுகள் கண்டிப்பாக அந்த விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதனை தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக மேற்கொள்வதே நல்லது" எனத் தெரிவித்தார்.
தேவையான ஆவணங்கள்
படிவம் 6இல் வாக்காளர் பெயருடன் அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, வாக்காளர்களாக உள்ள யாரேனும் ஒரு உறவினர் பெயர் மற்றும் அவர்களது விபரங்கள் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். இதன்பின்,
- ஆதார்
- பிறப்புச் சான்றிதழ்
- ஓட்டுநர் உரிமம்
- பான் கார்டு
- பாஸ்போர்ட்
உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பிறந்த தேதிக்கான சான்றாக அளிக்க வேண்டும். மேலும், தற்போது குடியிருந்து வரும் இருப்பிட முகவரியைக் குறிப்பிட வேண்டும். இதற்காக,
- தண்ணீர்
- மின்சாரம்
- கேஸ் சிலிண்டர் பில்கள்
- வங்கி கணக்கு
- அஞ்சல் கணக்கு எண்
- வாடகை ஒப்பந்தம்
போன்ற ஆவணங்களுள் ஏதேனும் ஒன்றை இருப்பிட முகவரிக்கான ஆவணங்களாக இணைக்க வேண்டும்.
ஆவணங்களை சரிபார்த்தல்
இந்த விபரங்களையும், உரிய ஆவணங்களையும் நிரப்பிய பின்னர், உறுதிமொழிப் பகுதியில் தேவையான அனைத்தையும் பதிவுசெய்த பின்னர் நம்முடைய கையெழுத்தை சேர்த்துவிட்டு, ‘ஓகே’ கொடுத்துவிட்டால் போதும். நம்முடைய பகுதியைச் சேர்ந்த வாக்குச்சாவடி அலுவலர் தொடர்பு கொண்டு அனைத்தையும் மறு உறுதி செய்த பின்னர், நம் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடும்.
நாம் வழங்குகின்ற தகவல்கள், ஆவணங்கள் அனைத்தையும் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்த பின்னர் பதிவேற்றம் செய்வது நல்லது. ஆகையால் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு வாக்காளரும், தங்களது வாக்குகளை வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பதிவு செய்ய வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் முயற்சிக்கு நாமும் வலு சேர்ப்போம்.

