#BIG NEWS : ஈரானுக்குப் பெரும் நெருக்கடி! - எண்ணெய் கிணறுகளை மூட வேண்டிய சூழல்..!
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, பிப்., 28ல் போரை துவக்கின. மோதலை முடிவுக்கு கொண்டு வர, பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன், கடந்த 11ல் அமைதி பேச்சு நடந்தது. 21 மணி நேரம் நடந்த பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை. கடந்த வார இறுதியில் இரண்டாம் கட்ட பேச்சு நடக்கவிருந்த நிலையில், இருதரப்பினரும் பேச்சில் பங்கேற்கவில்லை.
இதையடுத்து, பாக்., வாயிலாக அமெரிக்காவுக்கு, 10 அம்ச முன்மொழிவை ஈரான் அனுப்பியது. அதில், ஈரான் மீதான முற்றுகையை அமெரிக்கா விலக்கினால், போரை முடிவுக்கு கொண்டு வரவும், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும் ஒப்புக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அமெரிக்கா முக்கியமாக வலியுறுத்தி வரும் அணுசக்தி திட்டம் குறித்த விவாதத்தை தற்போதைக்கு ஒத்தி வைக்கவும், இது குறித்து பின்னர் பேசலாம் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால் இதை அமெரிக்கா நிராகரித்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்த அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், நேர்மையற்ற முறையில் ஈரான் பேச்சு நடத்துவதாகவும், அணுசக்தி விவகாரத்தை தவிர்க்க முயல்வதாகவும் குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், ஈரான் முன்மொழிவு குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியதாவது: ஈரானியர் கால அவகாசத்தை பெற விரும்பும் திறமையான பேச்சாளர்கள். அணுசக்தி விவகாரமே இந்த மோதலின் மையப்பகுதி. அதை விவாதிக்காமல் எந்த ஒப்பந்தமும் செய்ய முடியாது.
ஈரானில் தீவிர மதவாத ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை, எதிர் காலத்தில் அவர்கள் அணு ஆயுதங்கள் வேண்டும் என, முடிவெடுப்பர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அந்த அடிப்படையில் இப்பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதுவே தற்போதைய சூழலின் முக்கியமான விஷயம். இவ்வாறு அவர் கூறினார். அமெரிக்காவின் கடற்படை முற்றுகையால், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து தப்பிக்கவே ஈரான் இத்தகைய சமாதான திட்டத்தை முன்வைப்பதாக கூறப்படுகிறது. இரு தரப்பும் பிடிவாதம் பிடிப்பதால், இந்த மோதல் இன்னும் சில காலம் நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ள நிலையில், அமெரிக்க கடற்படையும் எதிர்முனையில் முற்றுகையில் ஈடுபட்டுள்ளதால், ஈரானால் தன் கச்சா எண்ணெயை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. கடந்த மாதம் நாளொன்றுக்கு, 18.5 லட்சம் பேரல்களாக இருந்த ஏற்றுமதி, இம்மாத இறுதியில் வெறும், 5.67 லட்சம் பேரல்களாக சரிந்துள்ளது.
இந்நிலை தொடர்ந்தால், தற்போதைய உற்பத்தியில் உள்நாட்டு பயன்பாடு போக, உபரியாக சேரும் கச்சா எண்ணெய் பேரல்கள் இன்னும், 12 - 22 நாட்களில் முழுமையாக நிரம்பி விடும். இதனால் மேற்கொண்டு உற்பத்தி செய்யப்படும் எண்ணெயை வைக்க இடமிருக்காது என்பதால், எண்ணெய் கிணறுகளை வலுக்கட்டாயமாக மூட வேண்டிய சூழல் ஏற்படும். ஒருமுறை எண்ணெய் உற்பத்தியை நிறுத்தினால், நிலத்தடி அழுத்த மாறுபாடுகள் காரணமாக கிணறுகள் சேதமடையலாம். அவற்றை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது மிக கடினமானது. இதனால் ஈரானின் நீண்டகால உற்பத்தி திறன் பாதிக்கப்படும்.

