#BIG NEWS : வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
ஒவ்வொரு வரும் அவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பதற்கான வருமான வரி விதிகளும் உள்ளது. இந்த விதிகளின்படி ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்று குழப்பமும் பலருக்கு உள்ளது. இருப்பினும் இந்திய சட்டத்தின்படி ஒரு நபர் தங்களது வீட்டில் இவ்வளவு தங்கம் தான் வைத்திருக்க வேண்டும் என்பதற்கான எந்த ஒரு அடிப்படை விதிகளும் இல்லை. எந்த ஒரு உச்சவரம்பும் கிடையாது. நீங்கள் எத்தனை கிலோ தங்கத்தை வேண்டுமானாலும் உங்கள் வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஆனால் இதற்கு ஒரு முக்கிய நிபந்தனையும் உள்ளது. அது உங்கள் வீட்டில் வைத்திருக்கும் அனைத்து தங்கத்தையும் சட்டபூர்வமாக வாங்கியிருக்க வேண்டும். நீங்கள் தங்கம் வாங்கிய வருமான ஆதாரங்களையும், அது குறித்தான கணக்கு வழக்கையும் காட்டி இருக்க வேண்டும். தங்கம் வாங்கியதற்கான முறையான ஆவணங்களை நீங்கள் வைத்திருக்கும் பட்சத்தில் நீங்கள் எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும் வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.
தற்போது பலர் வீடுகளிலும் உள்ள தங்கத்திற்கான ரசீதுகளோ, வாங்கிய பில்களோ இருக்காது. இந்த தங்கம் எப்படி நம் வீட்டிற்கு வந்ததற்கான ஆதாரமும் இருக்காது. இது போன்ற சமயங்களில் வருமான வரித்துறை சோதனையில் குறிப்பிட்ட அளவிற்கு வீட்டில் தங்கம் இருந்தால் அதற்கான ஆதாரங்களை பெரிதாக கேட்க மாட்டார்கள். அந்த தங்கங்களை பறிமுதலும் செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள திருமணமான பெண்கள் அதிகபட்சமாக 500 கிராம் வரை எந்தவிதமான ஆவணங்களும் இன்றி தங்கத்தை வைத்துக் கொள்ளலாம். அதேபோல திருமணம் ஆகாத இளம் பெண்கள் 250 கிராம் வரை தங்கத்தை வைத்திருக்க அனுமதி உள்ளது. மேலும் குடும்பத்தில் உள்ள ஆண்கள் திருமணம் ஆகி இருந்தாலும், ஆகாவிட்டாலும் 100 கிராம் வரையில் தங்கத்தை வைத்து இருக்கலாம். இந்த அளவுகளில் உங்கள் வீட்டில் தங்கம் இருக்கும் பட்சத்தில் வருமான வரித்துறை சோதனையில் இந்த தங்கம் சிக்கினாலும் இதற்கான ஆதாரங்களை பெரிதாக கேட்க மாட்டார்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளுக்கு கூடுதலாக உங்களிடம் தங்கம் இருந்தாலும் பிரச்சனை இல்லை. அதற்கான ரசீதுகளையும் வருமான ஆதாரங்களையும் நீங்கள் காட்டினால் போதும். நீங்கள் நகைகள் வாங்கிய ஒரிஜினல் பில்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. ஒரு சிலர் வீட்டில் பரம்பரை பரம்பரையாக சில நகைகளை வைத்திருப்பார்கள். அதற்கான வாங்கிய ரசீதுகள் இருக்காது. இது போன்ற சமயங்களில் அல்லது உங்களுக்கு தங்கம் பரிசு பொருளாக வந்தாலும் அதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை நீங்கள் பத்திரமாக வைத்துக் கொள்வது, உங்களை சட்ட சிக்கல்களில் இருந்து பாதுகாக்கும். உங்களிடம் உள்ள தங்கம் எப்போதும் பிரச்சனை இல்லை, அதற்கான வருமான ஆதாரங்களை சரியாக காட்டுவது தான் முக்கியம்.
தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்தது. மொத்தமாக ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. புதுச்சேரி ஏப்ரல் ஒன்பதாம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக கையில் எடுத்துச் சொல்லக்கூடாது. அப்படி எடுத்துச் சென்றாலும் அதற்கான வருமான ஆதாரங்களை காட்ட வேண்டும். அப்படி அதற்கான ஆதாரங்களை காட்டவில்லை என்றால் அந்த பணத்தினை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்வார்கள். அதே போல அதிக அளவில் தங்கத்தையும், பட்டுப் புடவையும், பரிசு பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதி இல்லை. நீங்கள் வியாபாரியாக இருக்கும் பட்சத்தில் அதற்கான முறையான ஆவணங்களை காட்ட வேண்டும். வாக்குப்பதிவு நடைபெறும் முறை இந்த விதிகள் அமலில் இருக்கும்.

