#BIG NEWS : கரூரில் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து..!

 
1

கரூரில் குளத்தூர் பகுதியில் உள்ள ஆளில்லாத தனியார் ரயில்வே லெவல் கிராசிங்கில் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. தனியார் பொறியியல் கல்லூரி முடிந்து மாணவர்களை வீட்டில் இறக்கி விடுவதற்காக, கல்லூரி பேருந்தில் ஓட்டுனர் பெரியசாமி சென்று கொண்டிருந்த போது ஜல்லிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் ரயில்வே ஆளில்லாத லெவல் கிராசிங் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் வந்த சரக்கு ரயில் பேருந்தின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்து உள்ளனர். பலருக்கு கை, கால் மற்றும் உடல் பகுதிகளில் காயம் ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து நடந்ததும் அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக காயமடைந்த மாணவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் ஏற்பட்டதா அல்லது எதிர்பாராத விதமாக நடந்ததா என்பது குறித்து போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

21 நபர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் 2 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், சரக்கு ரயில் திண்டுக்கல் மாவட்டம் கரிகாளி பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து சிமெண்ட் தயாரிக்கும் பவுடர் ஏற்றிக் கொண்டு, புலியூர் சிமெண்ட் ஆலைக்கு சென்று கொண்டிருந்தது.குளத்தூர் பகுதியில் லெவல் கிராசிங் பகுதியில் ஆட்கள் இல்லாததால் விபத்து ஏற்பட்டு உள்ளதாக தெரிய வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள மாணவர்களை நேரில் சந்தித்து ஜோதிமணி எம்.பி. நலம் விசாரித்தார்.