#BIG NEWS : சதுரகிரி மலை பகுதியில் மீண்டும் காட்டுத்தீ.. கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!
சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி ஆகஸ்ட் மாதம் 10 முதல் 13-ந் தேதி வரை பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டது. இந்த நாட்களில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பக்தர்கள் அனைவரும் தினமும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே மலை மீது ஏறி இறங்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாணிப்பாறை மலைப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு மலையின் கீழ் பகுதியை நோக்கி பரவி வருகிறது. தீயை கட்டுப்படுத்தும் பணியிலும், மலையில் காற்றின் வேகம் திசை மற்றும் சூழலை கண்காணிக்கும் பணியிலும் களப்பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது நிலவும் தீ பரவும் சூழல் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படக்கூடியதை கருத்தில் கொண்டு நிலைமை பாதுகாப்பானதாகவும், இயல்பானதாகவும் மாறும் வரை நேற்று (செவ்வாய்க்கிழமை) பொதுமக்கள் சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையிலும் சதுரகிரிக்கு செல்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்திருந்தனர்.
மேலும், சதுரகிரி மலைப்பகுதியில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் உயிர் மற்றும் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய அபாயத்தைத் தவிர்க்கும் வகையில், இயல்பு நிலை திரும்பும் வரை, சதுரகிரி கோயிலுக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலைப்பகுதியில் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதால், நிலைமை சீரான பின்னர் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி கோயிலுக்கு செல்வதற்கான அனுமதி குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் தனியாக அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

