#BIG NEWS : மகனின் திருமணத்திற்கு வந்த இடத்தில் சோகம்: டெக் மஹிந்திரா முன்னாள் அதிகாரி சுட்டு கொலை..!!
ஃபரீதாபாத்தின் செக்டர் 21C பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வாகனங்களை நிறுத்துவது மற்றும் செல்லப்பிராணி எச்சமிடுவது தொடர்பான தகராறில், டெக் மஹிந்திரா நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பிராந்திய முன்னாள் வணிகத் தலைவரான பரம்பீத் தன்கர் (42) என்பவர் அவரது அண்டை வீட்டாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு இயங்கி வந்த இவர், தற்போது வியட்நாமைச் சேர்ந்த FPT சோப்ட்வேர் நிறுவனத்தில் மூத்த துணைத் தலைவராகப் பணியாற்றி வந்தார்.
வெள்ளிக்கிழமை இரவு பரம்பீத் தன்கரை அவரது வீட்டிற்கு வெளியே அழைத்து வந்த அண்டை வீட்டைச் சேர்ந்த மோகன் சர்மா (44) என்ற பழைய இரும்பு வியாபாரி, தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் சுமார் 15 சுற்றுகள் சுட்டுள்ளார். இதில் 9 குண்டுகள் பாய்ந்ததில் பரம்பீத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, அவரது மகன் சவுரியாவையும் கொல்ல முயன்றபோது, அவர் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு பின்னால் ஒளிந்து உயிர்தப்பியுள்ளார்.
ஒரே நான்கு மாடி குடியிருப்பில் பரம்பீத் தரைதளத்திலும், மோகன் சர்மா இரண்டாவது மாடியிலும் வசித்து வந்தனர். மோகனின் மகன் நாய் வளர்த்து வந்த நிலையில், அது பொது பார்க்கிங் பகுதியில் எச்சமிடுவதற்கு பரம்பீத் குடும்பத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இரு குடும்பத்தினருக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் கடுமையான மோதல் நிலவி வந்தது. வரும் நவம்பர் 24 அன்று நடைபெறவிருந்த தனது மருமகனின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காகவே பரம்பீத் நவம்பர் 5-ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து ஃபரீதாபாத் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்து பரம்பீத்தின் மகன் சவுரியா அளித்த புகாரின் பேரில், சூரஜ்குண்ட் காவல் நிலைய போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 103(1) (கொலை) மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தப்பியோடிய குற்றவாளி மோகன் சர்மாவைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக ஃபரீதாபாத் காவல் செய்தி தொடர்பாளர் யஷ்பால் யாதவ் தெரிவித்துள்ளார்.

