#BIG NEWS : டீசல், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி உயர்வு..!!
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டீசல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ. 21.5-லிருந்து ரூ. 55.5 ஆக இரண்டு மடங்குக்கும் மேலாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், விமான எரிபொருள் மீதான வரி லிட்டருக்கு ரூ. 29.5-லிருந்து ரூ. 42 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி தொடர்ந்து பூஜ்ஜியமாகவே (Nil) நீடிக்கிறது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு இடையிலான பெரும் விலை வித்தியாசத்தைப் பயன்படுத்தி நிறுவனங்கள் அதிக லாபம் பெறுவதைத் தடுக்கவும் (Windfall gains tax), உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யவும் இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில் விலை உயர்ந்த போதிலும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தவில்லை.
பெட்ரோலிய அமைச்சகம் இது குறித்துக் கூறுகையில், "சர்வதேச அளவில் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஏற்றுமதியைக் குறைத்து சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தியை முதலில் உள்நாட்டுத் தேவைக்கு பயன்படுத்துவதே அரசின் நோக்கம். லாபகரமான ஏற்றுமதி வாய்ப்புகளை விட, இந்திய எரிபொருள் நிலையங்களில் தடையின்றி விநியோகம் செய்வதற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளது.
இந்த வரி விகிதங்கள் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை (Fortnightly) மறுஆய்வு செய்யப்படும் என்று மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) தலைவர் விவேக் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.



