#BIG NEWS : பண்ருட்டி பட்டாசு கடையில் தீ விபத்து: 7 பேர் படுகாயம்..!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முத்தாண்டிகுப்பத்தில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் எதிர்பாராதவிதமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
வெடிகள் வெடித்துச் சிதறிய இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 7 பேர் பலத்த தீக்காயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் அவர்களை மீட்டு, உடனடியாக மேல் சிகிச்சைக்காகக் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடாஜலம் மனைவி ஆனந்தி. இவர் உரிமம் பெற்று காளியம்மன் பயர் ஓர்க்ஸ் என்ற பெயரில் நாட்டு வெடிகள் தயாரித்து வருகிறார். இங்கு தயாரித்த பட்டாசுகள் தீபாவளியை முன்னிட்டு முத்தாண்டிக்குப்பம்–நெய்வேலி சாலையில் வெங்கடாஜலம் வீட்டில் வைத்து விற்பனை செய்து வந்தனர்.
மாலை 6:00 மணிக்கு கருணாமூர்த்தி,50; அவரது மனைவி சுகந்தி,40; மகன் பிரியதர்ஷன்,25; மகள் பிரியதர்ஷினி,22; வெங்கடாஜலம் மகன் பிரவீன்,25; ஆகியோர் வியாபாரம் செயது கொண்டிருந்தனர்.
அதியமான்குப்பத்தை சேர்ந்த சுப்ரமணி,55; சக்கரபாணி,65; ஆகியோர் பட்டாசு வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற ஒருவர் அருகில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட தீப்பொறி, கருணாமூர்த்தி வீட்டில் விழுந்ததில், அங்கிருந்த நாட்டு வெடிகள் ஒட்டு மொத்தமாக பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் பட்டாசு வியாபாரம் செய்து கொண்டிருந்த கருணாமூர்த்தி, சுகந்தி, பிரியதர்ஷினி, பிரியதர்ஷன், பிரவீன், மற்றும் பட்டாசு வாங்கிக் கொண்டிருந்த சுப்ரமணி, சக்கரபாணி ஆகிய 7 பேரும் படுகாயமடைந்தனர்.
அவர்களை, அங்கிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புல்னஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த சுப்ரமணி,55; கருணாமூர்த்தி, 50; இருவரும் மேல் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெடி விபத்து நடந்த பகுதியை டி.எஸ்.பி., ரகுபதி உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.
மேலும், இவ்விபத்து குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

