#BIG BREAKING: உலகமே ஸ்தம்பித்தது! திடீரென முடங்கிய மைக்ரோசாப்ட்..!!

 
Q

தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் முக்கிய சேவைகளில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் 365 (Microsoft 365) செயலிகளான அவுட்லுக் (Outlook) மற்றும் டீம்ஸ் (Teams) ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்தச் சேவை முடக்கத்தை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இணையதளச் சேவைகளின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் 'டவுன்டிடெக்டர்' (Downdetector) தளத்தின் தரவுகளின்படி, சேவை முடக்கம் ஏற்பட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே உலகின் 74 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து பயனர்கள் இது குறித்துப் புகார் அளித்துள்ளனர். அமெரிக்க நேரப்படி மதியம் 1 மணிக்குப் பிறகு (1800 GMT), அவுட்லுக் செயலியில் ஏற்பட்ட கோளாறுகள் குறித்து அமெரிக்காவிலிருந்து மட்டும் சுமார் 1,30,000 புகார்கள் பதிவாகின.

இந்தத் தொழில்நுட்பக் கோளாறினால் பயனர்களால் மின்னஞ்சல்களை அனுப்பவோ, பெறவோ முடியாத நிலை ஏற்பட்டது; பலருக்கு அவுட்லுக் செயலி முழுமையாக முடங்கியது. அவுட்லுக் மட்டுமின்றி, அலுவலகத் தகவல் தொடர்புச் செயலியான டீம்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு உதவியாளரான கோபைலட் (Copilot) ஆகிய சேவைகளும் பாதிக்கப்பட்டன. மேலும், மைக்ரோசாப்ட் 365 இணைப்புகளைப் (Connectors) பயன்படுத்தும் ஓபன் ஏஐ (OpenAI) மற்றும் ஆந்த்ரோபிக் (Anthropic) ஆகிய நிறுவனங்களின் கருவிகளும் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை.

இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட முதற்கட்ட அறிவிப்பில், அமெரிக்கப் பிராந்தியங்களில் உள்ள பயனர்கள் 'எக்ஸ்சேஞ்ச் ஆன்லைன்' (Exchange Online) மின்னஞ்சல்களைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை அறிந்துள்ளதாகக் கூறியது. நிறுவனத்தின் உள்கட்டமைப்பில் ஏற்பட்ட அதிகப்படியான அழுத்தமே (Elevated load) இந்த இணைப்புச் சிக்கல்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும், பாதிப்பைக் குறைக்க அனைத்து வழிகளிலும் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்திருந்தது.