#BIG BREAKING : ரியாத் விமான நிலையத்தில் பயங்கர வெடிப்பு! பயணிகள் அலறியடித்து ஓட்டம்!
சவுதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தில் (King Khalid International Airport) சனிக்கிழமையன்று பயங்கர வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பல பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக நேரில் பார்த்த சாட்சிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்திற்குள் சக்திவாய்ந்த வெடிப்பு சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, அங்கு கட்டடத்தின் தரைப்பகுதியில் பலர் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். சம்பவ இடத்திற்கு 12-க்கும் மேற்பட்ட அவசர ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளன. அசம்பாவிதத்தை தவிர்க்கும் பொருட்டு விமான நிலையத்தின் சில பகுதிகள் உடனடியாக காலியாக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து சவுதி அரசின் ஊடக பிரிவோ அல்லது சிவில் விமானப் போக்குவரத்து துறையோ உடனடியாக எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் அளிக்கவில்லை.யேமனின் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவை இலக்கு வைத்து நடத்தி வரும் ஏவுகணை தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இந்த வாரத்தில் மட்டும் ரியாத் விமான நிலையம் இரண்டு முறை தாக்குதலுக்கு உள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்; பல பயணிகள் காயமடைந்ததோடு விமானம் ஒன்றும் கடுமையாக சேதமடைந்தது.
இன்றைய தாக்குதலை தொடர்ந்து, ரியாத் நோக்கிய அனைத்து விமான சேவைகளும் வேறு பாதைகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களால் ரியாத் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள குவைத் ஏர்வேஸ், எத்திஹாட் மற்றும் கட்டார் ஏர்வேஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களது விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன.
ரியாத்தில் விரைவில் முக்கிய எரிசக்தி மற்றும் முதலீட்டு மாநாடுகள் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாநாடுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ரியாத் விமான நிலையப் பகுதியை புறக்கணிக்குமாறு அமெரிக்க தூதரகம் தனது குடிமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

