இந்த துயர சம்பவம் ஒரு திட்டமிட்ட சதி- போலே பாபாவின் வழக்கறிஞர் அதிர்ச்சி தகவல் !

 
1

போலே பாபா சத்சங்கில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் விபத்து இல்லை அது ஒரு சதிச் செயல் என்று போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஏ.பி.சிங், “ஜூலை 2-ம் தேதி 121 பேர் இறப்புக் காரணமாக இருந்த நெரிசல் சம்பவம் நடைபெற்ற போது சுமார் 15 -16 பேர் முகத்தை மூடிய படி கூட்டத்தில் இருந்தனர். அவர்கள் நச்சு வாயுவை கூட்டத்தில் தெளித்துவிட்டு காரில் தப்பிச் சென்றனர்.

போலே பாபாவை சிக்கவைக்க சதி நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகளை சிக்கவைக்கக்கூடிய ஆதாரமான சிசிடிவி காட்சிகளை போலீஸார் உடனடியாக கைப்பற்ற வேண்டும். நெரிசல் சம்பவம் ஒரு விபத்து அல்ல. அது ஒரு சதிச் செயல்” என்று தெரிவித்தார். அப்போது, கூட்டம் நடத்துவதற்கு காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் போக்குவரத்து துறை வழங்கிய அனுமதி சான்றுகளையும் அவர் காண்பித்தார்.

ஹாத்ரஸ் நெரிசல் சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச போலீஸார் இதுவரை இரண்டு பெண்கள், மூன்று முதியவர்கள் உட்பட ஒன்பது பேரைக் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஹாத்ரஸ் சத்சங்கிற்கு ஏற்பாடு செய்த முக்கிய புள்ளியான தேவ்பிரகாஷ் மதுக்கர்உட்பட பலர் அந்த சத்சங்கின் தன்னார்வலர்கள்.

போலீஸாரின் கூற்றுப்படி, தேவ்பிரகாஷ் மதுக்கர் நாரயணன் ஹரிக்காக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான நிதி சேகரிப்பாளராக பணியாற்றினார். நன்கொடைகள் வசூலித்தார்.

ஹாத்ரஸ் சம்வத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளியான தேவ்பிரகாஷ் மதுக்கர் என்பவரை உத்தரப் பிரதேச போலீஸார் வெள்ளிக்கிழமை டெல்லியில் வைத்து கைது செய்தனர். இதனிடையே, மதுக்கர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி. சிங், தேவ்பிரகாஷ் மதுக்கர், மருத்துவ சிகிச்சைக்காக டெல்லிவந்த போது போலீஸாரிடம் சரணடைந்தார் என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் சம்பவத்துக்கு காரணமான முக்கிய நபராகக் கருதப்படும் நாரயண் சாக்கா விஷ்வ ஹரி போலே பாபா எனும் சூரஜ்பால் ஜாத்தவ் பெயர் சேர்க்கப்படவில்லை. மேலும் ஜூலை 2-ம் தேதி முதல் தலைமறைவாக இருக்கும் அவர் இன்னும் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.