#Bhogi போகி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய பொதுமக்கள்!!

 
bhogi

தமிழ்நாட்டில் போகி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

bhogi

போகி தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று, அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. போகிப் பண்டிகை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.  'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாக இந்நாள் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழித்துப் போக்கும் இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். 

bhogi

இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளான போகி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பழைய பொருட்களை எரித்தும், மேளம் அடித்தும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையிலேயே மக்கள் பழைய பொருட்களை தீயிட்டு போட்டு எரித்து போகி  பண்டிகையை கொண்டாடினர். அத்துடன் காற்று மாசை ஏற்படுத்தக்கூடும் ரப்பர், பிளாஸ்டிக்  போன்ற பொருட்களை மாசு கட்டுப்பாட்டு வாரியம் எரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இதுபோன்ற  பொருட்கள் கொளுத்துவதை தவிர்த்து, வீட்டில் உள்ள பழைய பாய்,  துணி உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களால் கொளுத்தப்பட்டு போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.