“தலைசிறந்த கலைஞருக்கான உயரிய அங்கீகாரம்”- முதல்வர் விஜய்க்கு பாரதிராஜா குடும்பத்தினர் நன்றி
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இறுதி நிகழ்விற்கு அரசு மரியாதை செய்த முதலமைச்சர் விஜய்க்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்வதாக அவரது மனைவி மற்றும் மகள் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் திரைப்பட உலகின் பெருமைமிகு படைப்பாளரும், எண்ணற்ற கலைஞர்களுக்கு வழிகாட்டியுமான இயக்குநர் பாரதிராஜா அவர்களின் இறுதி நிகழ்விற்கு தமிழக அரசு வழங்கிய மரியாதை மற்றும் கண்ணியத்திற்கு எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அரசு சார்பில் வழங்கப்பட்ட அஞ்சலியும், மரியாதையும் அவரின் ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகினருக்கு மிகவும் ஆறுதலாக அமைந்தது. தமிழ் கலாச்சாரம், கலை மற்றும் திரைப்படத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை மதித்து, ஒரு தலைசிறந்த கலைஞரின் சேவையை உரிய முறையில் கௌரவிக்கும் விதமாக மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள், நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
இதுமட்டுமல்லாமல் '72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட வேண்டும்' என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தது, ஒரு தலைசிறந்த கலைஞருக்கான உயரிய அங்கீகாரமாக மட்டுமல்லாமல், கலைத்துறையின் உணர்வுகளையும், பாரம்பரியத்தையும் ஆழமாகப் புரிந்துகொண்ட ஒரு தலைவரின் பக்குவமான அறிவிப்பாக விளங்குகிறது. திரைப்படத் துறையில் நீண்டகால அனுபவம் பெற்ற நடிகராக இருந்து இன்று மாநிலத்தின் முதலமைச்சராக உயர்ந்துள்ள நீங்கள், கலைஞர்களின் பங்களிப்பை மதிக்கும் பண்பும், தங்களுடைய வாழ்க்கை அனுபவமும், இந்த அறிவிப்பின் மூலம் வெளிப்பட்டது.

இத்தகைய உயரிய மரியாதை வழங்கப்பட்டதன் மூலம், இயக்குனர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் கலைப் பயணத்திற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் அவர் ஆற்றிய சேவைக்கும் உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்காக தமிழக அரசிற்கும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறையின் அனைத்து நிலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

